Chennai Traffic Diversion: வீக் எண்ட் வெளியே போறீங்களா? நாளை போக்குவரத்து மாற்றம்..எந்த ரூட்ல தெரியுமா?
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நாளை சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Chennai Traffic Diversion: விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நாளை சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி:
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரம்மாண்ட சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டன. சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னை நான்கு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவித்திருக்கிறது. அதாவது, பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நாளை வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் 51, 51A, V51, A51 ஆகிய மாநகர பேருந்துகள், பள்ளிக்கரணை மேம்பாலத்தை பயன்படுத்தி செல்லும். மறு மார்க்கமாக அதே வழிதடத்தில் பேருந்துகள் இயங்கும்.
- மாம்பாக்கம் சாலை வழியாக வேளச்சேரி, தாம்பரம் மெயின் ரோடு செல்லும் 51B மற்றும் 5LV ஆகிய பேருந்துகள் மாற்று வழியாக சித்தாலப்பாக்கம் சந்திப்பை அடைந்து, மாடம்பாக்கம் சிவன் கோவில், ராஜகீழ்பாக்கம் வழியாக சென்று வேளச்சேரி பிரதான சாலையை சென்றடையும். மறு மார்க்கமாக அதே வழிதடத்தில் பேருந்துகள் இயங்கும்.
- தாம்பரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 95,99, 99ஏ ஆகிய பேருந்துகள் அனைத்தும் செம்மொழி சாலையினை பயன்படுத்தாமல், மாற்று வழியாக காமாட்சி மருத்துவமனை சந்திப்பினை சென்றடைந்து 200 அடி ரேடியல் சாலை துரைப்பாக்கம் வழியாக செல்லும். மறு மார்க்கமாக அதே வழித்தடத்தில் பேருந்துகள் இயங்கும்.
- மணலி மார்க்கெட் சந்திப்பில் இருந்து காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையம், மூலக்கடை, வியாசர்பாடி, மணலி எக்ஸ்பிரஸ் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, திருவொற்றியூர் உயர் சாலை வழியாக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு சென்று கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விதிமுறைகள்:
- நிறுவப்பட இருக்கின்ற சிலைகள் களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு செய்யப்பட்டிருக்கக்கூடாது. ஏற்கனவே வாங்கி நிறுவப்பட்ட சிலைகளை பொருத்தவரையில் அவற்றை பொது நீர் நிலைகளில் கரைக்கக்கூடாது. இது தொடர்பாக
W.P(MD).No.22892/2023 மற்றும் W.A(MD).No.1599/2023 ஆகியவற்றில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில் நடந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. - சிலையின் உயரம் பீடம் உட்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிலைகளானது வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் நிறுவப்படக்கூடாது.
- விழா அமைப்பாளர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு பந்தல் அமைப்பதை தவிர்த்திடல் வேண்டும்.
விழா அமைப்பினைச் சேர்ந்த இருவர் 24 மணிநேரமும் சிலை பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.