(Source: ECI/ABP News/ABP Majha)
Marina Beach: அனுமதித்த முதல் நாளே சோகம்.. மெரினாவில் மாயமான 3 மாணவர்கள்.. தேடும் பணியில் ஹெலிகாப்டர்!
ஊரடங்கிற்கு பிறகு மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலே மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களில் முதன்மையானது மெரினா கடற்கரை. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரை, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதம் முதல் பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட புதிய ஊரடங்கு தளர்வுகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் 23-ந் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசின் உத்தரவையடுத்து, இன்று காலை முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். பள்ளிகள், கல்லூரிகள் ஏதும் திறக்கப்படாததாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் கடற்கரைக்கு செல்ல அரசு அனுமதித்துள்ளதாலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
அப்போது, 12ம் வகுப்பு மட்டுமே நிறைவு செய்திருந்த பள்ளி மாணவர்களாகிய தர்மராஜ், விமல் மற்றும் சபரீநாதன் ஆகிய மூவரும் மெரினாவிற்கு வந்தனர். நண்பர்களாகிய மூன்று பேரும் கடலில் ஆனந்தமாக குளித்து விளையாடினர். அவர்கள் மூன்று பேருக்கும் சுமார் 20 வயது மட்டுமே இருக்கும். அப்போது, மிகவும் ஆழத்திற்கு அவர்கள் விளையாட சென்றதால் அவர்கள் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் நீருக்குள் இழுத்துச் செல்லப்படுவதை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான மாணவர்கள் மூன்று பேரையும் போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மூன்று பேரையும் ஹெலிகாப்டர் மூலமாக தற்போது தேடி வருகின்றனர். அவர்களின் நிலைமை என்னவென்று தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
கொரோனா ஊரடங்கினால் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு, மெரினாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலே மூன்று மாணவர்கள் கடலில் மூழ்கி மாயமான சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடலில் குளிக்க வருபவர்களையும், குழந்தைகள் உள்பட குடும்பத்துடன் வருபவர்களையும் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றன். மேலும், காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.