சென்னை சிறுமி பாலியல் வழக்கு: இன்ஸ்பெக்டர், செய்தியாளர், பாஜக பிரமுகர் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு
குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேர்களில், இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலக் கட்டத்தின் போது இறந்து விட்டார்.
சென்னை வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காவல்துறை ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி என்கிற வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 22 பேரை கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேர்களில், இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலக் கட்டத்தின் போது இறந்து விட்டார். மீதமுள்ள 21 பேர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.
இவர்களுக்கான தண்டனை விவரத்தை வரும் 19 ஆம் தேதி கூறுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மாரி, பாஷா, முத்துபாண்டி மற்றும் மீனா ஆகியோர் தலைமறைவாகி விட்டதால் அவர்களுக்கு எதிரான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கபடும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் சராசரியாக இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தது.
டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.