சென்னை ; ரூ. 25 லட்சம் வீடு லீசு மோசடி !! 73 வயது முதியவருக்கு நேர்ந்த துயரம்
டி.பி.சத்திரம் பகுதியில் வீட்டை லீசுக்கு கொடுப்பதாக கூறி பணம் பெற்று ரூ.20 லட்சம் மோசடி செய்த நபர் கைது.

ரூ. 25 லட்சத்துக்கு வீடு லீசு
சென்னை கீழ்பாக்கம் கால்வாய் சாலையில் வசித்து வரும் முகமது அலி ( வயது 73 ) என்பவர் 2024 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் , தனக்கு தெரிந்த பிரேம் குமார் என்பவரின் மூலம் லீசுக்கு வீடு பார்த்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
அப்பொழுது , பிரேம் குமார் சாலி கிராமம் , காவிரி ரங்கன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 3 வீட்டை ரூ.25 இலட்சத்துக்கு லீசுக்கு கொடுப்பதாக கேட்டதன் பேரில் , 2024 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணம் ரூ.25 இலட்சத்தை கொடுத்ததாகவும் , பணத்தை பெற்று கொண்ட பிரேம் குமார் , ஏழு நாட்கள் கழித்து வீட்டின் சாவியை தருவதாக கூறி , 2 மாதங்களாகியும் வீட்டை தராமால் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
வங்கி காசோலையில் பணம் இல்லை
முகமது அலி , பிரேம்குமாரிடம் பணத்தை கேட்ட போது, பிரேம்குமார் 24.03.2025 அன்று ரூ.5 இலட்சம் பணத்தை முகமது அலியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டு, மீதி தரவேண்டிய பணம் ரூ.20 இலட்சத்தை காசோலையாக கொடுத்ததாகவும் , முகமது அலி காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணமில்லை என திரும்ப வந்துள்ளது.
பணத்தை மீட்டு தர காவல் நிலையத்தில் புகார்
தன்னை மோசடி செய்த பிரேம்குமாரிடமிருந்து தனது பணத்தை மீட்டு தரும் படி முகமது அலி என்பவர் டி.பி.சத்திரம் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
டி.பி.சத்திரம் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை செய்து, மோசடியில் ஈடுபட்ட பிரேம்குமார் ( வயது 36 ) சென்னை என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பிரேம்குமார் மீது இதே போல விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட பிரேம்குமார் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















