Chennai Flood : 'சென்னை மழைநீர் வடிகால்’ எதிரில் இருக்கும் சவால்களும் எதிர்நோக்கும் தீர்வுகளும்..!
சாலையின் அகலம்தான் நடைபாதையின் அகலத்தை தீர்மானிக்கும். சென்னையில், மேலதிகமாக, நடைபாதையின் அகலம்தான் வடிகாலின் அகலத்தைத் தீர்மானிக்கிறது. இதுதான் வடிகால்களின் அகலம் குறைவாக இருப்பதற்கான காரணம்.
நவம்பர் 27, சனிக்கிழமை, காலை 8:30 மணி, சென்னை நுங்கம்பாக்கம் மழைமானி நவம்பர் மாதத் துவக்கத்தில் இருந்து அதுவரை பதிவு செய்த மழையின் அளவு 1006 மில்லி மீட்டர் (மிமீ). கடந்த நூறாண்டுகளில் நவம்பர் மாதம் 1000மிமீ-க்கு அதிகமாக மழை பெய்தது இரண்டு முறைதான்- 1918(1088மிமீ), 2015 (1049மிமீ). நவம்பர் மாதம் சராசரியாகப் பொழிகிற மழை அளவு 600மிமீ. அதாவது இப்போது மூன்றில் இரண்டு பங்கு அதிக மழை மொழிந்திருக்கிறது. நவம்பர் மாதத்தின் முதல் 27 நாட்களில், நுங்கம்பாக்கம் மழைமானி 24 நாட்கள் மழையைப் பதிவு செய்திருந்தது. மூன்றுக்கும் மேற்பட்ட முறை சென்னை நகரின் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தது.
நவம்பர் 6ஆம் தேதி இரவு மட்டும் நுங்கம்பாக்கம் பதிவு செய்த மழை 230 மிமீ. அன்றிரவு தொடங்கிய ழை நவம்பர் 12 வரை தொடர்ந்தது. ஊடகங்கள் இதைப் பெருமழை என்றன. அதே வேளையில் கிளாஸ்கோவில் ஒரு பன்னாட்டு மாநாடு நடந்தது. உறுப்பினர்கள் உலகளாவிய பருவநிலை மாற்றத்தை எப்படித் தடுப்பதென்று பேசினார்கள். இந்த இரண்டு சம்பவங்களும் தனித்தனியானவை. ஆனாலும் தொடர்புடையவை. சிலர் பருவநிலை மாற்றத்தால்தான் இந்த மழையும் வெள்ளமும் என்று வாதிட்டார்கள். பூமி வெப்பமடைகிறது, உலகின் பல நகரங்களிலும் குறுகிய காலத்தில் அதீத மழை பொழிகிறது, இதுதான் சென்னையிலும் நடந்தது, இதற்கு யாரால் என்ன செய்ய முடியும் என்று அவர்கள் கேட்டார்கள். சென்னை தத்தளிப்பதற்குப் பருவ நிலை மாற்றத்தின் மீது மட்டும் பழியைப் போட்டுத் தப்பித்துவிட முடியுமா?
சென்னையில் இன்னும் நீர் வடியாத இடங்கள் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்று செம்மஞ்சேரி. அதன் அடுக்ககங்களைச் சுற்றி அகழிகள் உருவாகிவிட்டன. கோட்டைக்குள் சிறைப்பட்டவர்கள் சாலைக்கு வந்து சேரக் கட்டணப் படகுச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள். மணலியின் வடிகால் கொசஸ்தலையாறு. மணலியின் மழைநீர் வடிந்து கொசஸ்தலையாற்றுக்குப் போக வேண்டும். ஆனால் பூண்டி ஏரியைத் திறந்ததும் கொசஸ்தலையாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அது மணலியை மூழ்கடிக்கிறது. நவம்பர் 22ஆம் தேதி பெய்த ஒரு மணி நேர மழையில் ஸ்மார்ட்-தி.நகரின் சாலைகளில் எல்லாம் வெள்ளம் தேங்கிவிட்டது.
T.Nagar Smart City Sarathy street off Habibullah Road has been waterlogged continuosly from the first rain inspite of SWD. Residents say that they have been complaining to GCC in 1913 almost every day and the response of the Corporation has been very poor. @chennaicorp pic.twitter.com/WWowLL7eD3
— Jayaram Venkatesan (@JayaramArappor) November 20, 2021
இது வழமையைக் காட்டிலும் அதிகமான மழைதான். ஆனால் கடந்த நூற்றாண்டில் நவம்பர் மாதங்களில் பல முறை கன மழை பெய்திருக்கிறது- 1918 (1088மிமீ), 1976(709மிமீ), 1985(807மிமீ), 1997(832மிமீ), 2015 (1049மிமீ). ஆகவே மொத்தப் பழியையும் வெப்பமாகும் பூமியின் மீது போட்டுத் தப்பிக்க முடியாது.
இது அதீத மழை, நமது வடிகால்களால் சமாளிக்க முடியவில்லை, அதனால் தண்ணீர் தேங்கிவிட்டது என்கிறார்கள் சிலர். ஒரு வாதத்திற்காக இதைச் சரியென்று எடுத்துக்கொண்டால், மழை குறைந்ததும் தேங்கிய வெள்ளம் வடிகால் வழியோடி வாய்க்கால், கால்வாய், ஆறு என்று பயணித்துக் கடலில் கலந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. வெள்ளம் தேங்கி நின்றது. இறைத்துத்தான் வெளியேற்ற முடிந்தது. வெள்ளம் தேங்கியதற்குக் காரணங்கள் பல.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளை விழுங்கி நிற்கும் ஆக்கிரமிப்புகளும்வடிகால்களைக் குப்பைக்கூளங்களால் அடைத்துவிடும் நகரவாசிகளின் பொறுப்பின்மையும் முக்கியமானவை. இதைக் குறித்துப் பல சூழலியரும் சமூக ஆர்வலரும் பேசி வருகிறார்கள். இன்னொரு மிக முக்கியமான காரணம் மழைநீர் வடிகால்களின் போதாமையும், அதன் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளும்.
உலகமே நகர மயமாகி வருகிறது. இற்றைத் தேதியில் கிராமங்களைவிட நகரங்களில்தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள். ஒரு ஊர் நகர்மயமாகிறபோது கூடுதல் மழைநீர் வடிகால்களும் வாய்க்கால்களும் வேண்டிவரும். மண் தரையும் குறைவான வீடுகளும் மரம் செடிகளும் உள்ள கிராமப்புற நிலத்தில் பெய்கிற மழையில் 40% நீர் ஆவியாகும், 40% நீரை நிலம் ஈர்த்துக்கொள்ளும், 20% நீர் நிலத்தின் மீது ஓடும். மாறாக, நெருக்கமான கட்டிடங்களும் சாலைகளும் மிகுந்த நகர்ப்புறத்தில் 30% ஆவியாகும், 10% நிலத்தடியில் போகும், 60% நீர் சாலைகளில் மிகுந்து நிற்கும். ஆகவே இந்த மிகு நீரை வெளியேற்றத்தக்க வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும்.
துறைமுகம் சட்டமன்ற தொகுதி 56அ வட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டை சந்து பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் மழைநீர் வடிகால் குழாய்கள் அமைக்கும் பணியினை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு @Dayanidhi_Maran அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். pic.twitter.com/whWftwnGMg
— P.K. Sekar Babu (@PKSekarbabu) January 28, 2021
வடிகால் வடிவமைப்பில் இரண்டு பிரதான அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படும். முதலாவது எந்த அளவிற்கான மழையை உடனடியாகக் கடத்த வேண்டும் என்பது. அந்த அளவைக்காட்டிலும் கூடுதல் மழை பெய்தால் அது சில மணி நேரங்களுக்குச் சாலையில் தேங்கி நிற்கும். பின்னர் வடிந்துவிடும். இரண்டாவது அம்சம், குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும்
வடிகாலுக்கு எந்தெந்தப் பகுதியில் இருந்து நீர் வடிந்து வரும் என்பதை வைத்து வடிகாலின் கொள்ளளவைக் கணக்கிட வேண்டும். இதிலிருந்துதான் வடிகாலின் அகலமும் ஆழமும் நிர்ணயிக்கப்படும். இப்படியான பொறியியல் ரீதியான கணக்குகளின் அடிப்படையில் அமைந்தவையன்று சென்னை நகரத்தின் மழைநீர் வடிகால்கள். அவற்றின் ஆழமும் குறைவு; அகலமும் குறைவு.
சென்னை நகரின் வடிகால்கள் பராம்பரியமான 'ப' வடிவத்தில் நடைபாதையின் நேர் கீழே அமைக்கப்படுகின்றன. முன்னர் இது செங்கற்களால் கட்டப்பட்டன. இப்போது கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. சாலையின் அகலம்தான் நடைபாதையின் அகலத்தை தீர்மானிக்கும். சென்னையில், மேலதிகமாக, நடைபாதையின் அகலம்தான் வடிகாலின் அகலத்தைத் தீர்மானிக்கிறது. இதுதான் வடிகால்களின் அகலம் குறைவாக இருப்பதற்கான காரணம்.
இந்த வடிகால்கள் கால்வாயிலோ ஆற்றிலோ போய்ச் சேரவேண்டும். சென்னை நகரின் நிலமட்டம் கடலின் நீர்மட்டத்தைவிட அதிக உயரத்தில் இல்லை. ஆகவே ஆற்றின் மட்டமும் கால்வாயின் மட்டமும் கடல் மட்டத்தைவிடத் தாழ்வாகவே இருக்கும். வடிகாலின் அடிமட்டம் இந்த மட்டங்களைவிட உயரத்தில் இருந்தால்தான் நீர் பாய முடியும். வடிகாலின் ஆழத்தை அது போய்ச் சேரும் கால்வாய் அல்லது ஆற்றின் நீர் மட்டம் தீர்மானிக்கிறது. இதுதான் வடிகால்களின் ஆழம் குறைவாக இருப்பதற்கான காரணம்.
ஆக, சென்னையின் வடிகால்கள் மழை அளவை வைத்தும் நீர் வரத்தை வைத்தும் வடிவமைக்கப்பட்டவை அல்ல. அது நடைபாதையின் அகலத்தை வைத்தும் நீர் வடியும் ஆற்றின் நீர் மட்டத்தை வைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் இந்தக் குறைபட்ட வடிகால்களும் நகரத்தின் 40% சாலைகளில் மட்டுமே இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
இந்தப் பாரம்பரியமான வடிவமைப்புச் சித்தாந்தத்திலிருந்து இந்த நகரம் விடுதலை பெற வேண்டும். நீர்வரத்துக்கு ஏற்ற கொள்ளளவில் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும். பராம்பரிய முறையில் அதற்கான வாட்டம் கிடைக்காதென்றால், புதிய முறைகளைக் கைக்கொள்ள வேண்டும். காலவதியான வடிவமைப்பைக் கட்டிப் பிடித்துக் கொண்டிராமல், நவீன முறைகளைப் பின்பற்றவேண்டும். ஆழ் குழாய்கள், நீரேற்று இயந்திரங்கள், சுரங்கப் பாதைகள் முதலான வழிமுறைகளைக் குறித்து ஆலோசிக்கலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னும் சில வடிவமைப்பு சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றன. சாலைகளைச் சீரமைக்கும் தோறும் அவற்றின் உயரம் கூடிக்கொண்டே போகிறது. இதனால் வீடுகள் தாழ்ந்து போகின்றன. மழைக்காலத்தில் நீர் தேங்குகிறது. சாலையில் வடிகால் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தத் 'தாழ்ந்த மனிதர்கள்' வெள்ளத்தை இறைத்துத்தான் வெளியேற்ற வேண்டியிருக்கிறது.
அடுத்து, மழைநீர் கழிவுநீரோடு கலப்பது இன்னொரு பிரச்சனை. பழைய மழைநீர் வடிகால்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் அடிப்பகுதி பழுது பட்டிருக்கும். இதன் வழியாக மழைநீர் கீழே போய்க் கழிவுநீர்க் குழாய்களின் இணைப்பின் வழியாகக் கசியும் நீரில் சேர்ந்து ஒன்றோடொன்று கலந்து விடும். இதைத் தவிர தடைபட்டுத் தேங்கி நிற்கும் மழைநீரைக் கழிவுநீர் வடிகாலுக்கு மடைமாற்றி விடுகிற குறுக்கு வழியையும் பலர் கைக்கொள்கின்றனர். இதனால் கழிவுநீர் மிகுந்து சாலையில் வழிகிறது, அது தேங்கி நிற்கும் மழைநீரோடு கலக்கிறது.
நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், அவற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதும், மேலும் அவற்றில் திடக்கழிவுகள் குப்பைக்கூளங்கள் கொட்டப்படுவதைத் தடுப்பதும் முக்கியமானவை. அதே வேளையில், சென்னை நகருக்கு உள்ள சவால்களை மனங்கொண்டு நவீன முறைகளில் வடிகால்களை வடிவமைக்க வேண்டும்.
ஒரு கவிதையைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளலாம்.வீட்டிற்குள்ளிலிருந்து தெருவிற்கு ஓடிவந்து கைகளை உயர்த்தி மழைநடனம் ஆடுகிற குழந்தைகள்/அந்த நடனத்தில் மழை எப்போது குழந்தைகள் ஆகிறது என்றும்/குழந்தைகள் எப்போது மழையாகிறார்கள் என்றும் தெரியாது.
மழையை இப்படிக் கவிதையில் பிடிக்க முயல்பவர் வண்ணதாசன். மழையின்போது குழந்தைகள் மழையாவது மட்டுமில்லை, வளர்ந்த மனிதர்களே குழந்தைகளாகி விடுவார்கள். ஆனால் அது ஒரு காலம். மழைநீர் வழிந்தோடிய காலம். இன்று மழை தேங்கி நிற்கிறது. அதனால் மழை விரோதி ஆகிவிட்டது.
நாம் காலங்காலமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள்தாம். நீரைப் பாதுகாப்பதற்கும் உபரி நீரை வெளியேற்றுவதற்கும் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டவர்கள். இடையில் சென்னையைப் பெரு நகரமாக்கும் பதற்றத்தில் முக்கியமான உள்கட்டமைப்புக் கூறான மழைநீர் வடிகாலுக்கு முக்கியத்துவம் தரத் தவறிவிட்டோம். தவறைத் திருத்துவோம். நவீன வடிகால்கள் அமைப்போம்.
தொடர்புக்கு - mu.ramanathan@gmail.com