TN Rain : காலையில் வெயில்... மாலையில் பலத்த காற்றுடன் மழை... சென்னை நிலவரம் என்ன?
சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மாலையில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மாலையில் மழை பெய்து வருகிறது. இன்று காலை கூட கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில், மாலையில் சட்டென வானிலை மாறியது. சிறிது நேரத்தில் ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி, கே.கே.நகர், அசோக் நகர், பம்மல், நங்கநல்லூர், மடிப்பாக்கம், கூடுவாஞ்சேரி, நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதுமட்டுமின்றி, அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1.நேற்று (09.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிப்பர்ஜாய்” வடக்கு திசையில் நகர்ந்து இன்று (10.06.2023) காலை 08:30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு-வடமேற்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 620 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு, அடுத்த மூன்று தினங்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
2. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
10.06.2023 மற்றும் 11.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.06.2023 முதல் 14.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.