5 பேருக்காக ட்ரைவர் எடுத்த ரிஸ்க்! சப்வே வெள்ளநீரில் சிக்கிய பேருந்து - விரைந்து வந்த போட்!!
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மாநகரப் பேருந்து சிக்கிக்கொண்டது. இதையடுத்து, பயணிகள் படகுகள் மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னையின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்குவது சைதாப்பேட்டை. சென்னையில் எப்போது எல்லாம் பெருமழை, வெள்ளம் ஏற்படுகிறதோ அப்போது சைதாப்பேட்டையில் கடுமையான பாதிப்பு ஏற்படும். கடந்த சில தினங்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் சைதாப்பேட்டை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சைதாப்பேட்டையில் உள்ள முக்கிய சுரங்கப்பாதைகளில் ஒன்றான அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழைநீர் பாதியளவிற்கு தேங்கியிருந்தது. அப்போது அந்த வழியே வந்த மாநகரப் பேருந்து மழைநீரினால் அந்த சுரங்கப்பாதையிலே சிக்கிக்கொண்டது. பேருந்தில் 5 பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக படகு ஒன்றுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், பேருந்தில் சிக்கிக் கொண்டிருந்த பயணிகளை அவர்கள் பத்திரமாக மீட்டனர். அந்த பேருந்து போரூரில் இருந்து மந்தைவெளிக்கு சென்றுள்ளது. ஒவ்வொரு முறை மழை வெள்ளம் வரும்போதும் அரங்கநாதன் சுரங்கப்பாதை மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவதும், மழைநீரால் இந்த சுரங்கப்பாதை மூழ்குவதும் வாடிக்கையாக உள்ளது என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர்.