Chennai Metro Rail: வாவ்! இனி அனைத்து நகர மெட்ரோக்களிலும் பயணிக்கலாம்: வருகிறது ஸ்மார்ட் கார்டுக்கு பதில் புதிய கார்டு; எப்படி பயன்படுத்துவது?
சென்னை மெட்ரோவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பயண அட்டையை நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Chennai Metro Rail: சென்னை மெட்ரோவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பயண அட்டையை நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில்:
சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது.
அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
விரைவில் புதிய வசதி:
அந்த வகையில், தற்போது ஒரு புதிய வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ பயண அட்டையை நிறுத்திவிட்டு, தேசிய பொது இயக்க அட்டையை (National Common Mobility Card) விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை பாரத் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப், பேடிஎம் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. இதில் அடுத்த கட்டமாக புதிய வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பயண அட்டையை வைத்துக் கொண்டு சென்னை மட்டுமின்றி, மற்ற நகர்களின் மெட்ரோ ரயில்களிலும் பயணிக்க பயன்படுத்தலாம். மேலும், சென்னை எம்டிசி பேருந்துகளிலும் இதனை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த என்சிஎம்சி (National Common Mobility Card) அட்டை டேபிட் கார்டு போன்று செயல்படும். அதாவது, உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்படும். இதனை தற்போது இருக்கும் பயண அட்டை போன்று ரீசார்ஜ் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும், இந்த என்சிஎம்சி கார்ட்டை வைத்துக் கொண்டு பார்க்கிங், நகரப் பேருந்துகள், ஷாப்பிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோவிலும் மொபைலுக்கு சார்ஜ் போடலாம்:
சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. 2ஆம் கட்ட மெட்ரோ பணிக்காக சுமார் ரூ.61,843 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாதவரம்-சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்களில் பயனர்கள் தங்கள் மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்வது போன்று புதிய வசதி அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.