Watch Video | இவ்ளோ தண்ணியா? வெளுத்த மழையில ரோட்டுக்கே வந்த மெரினா கடல்..!
சென்னையில் பெய்த கனமழையால் மெரினா கடற்கரை முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், கடல் எது? கடற்கரை எது? என்று தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத் தாழ்வுபகுதி காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு மட்டும் சென்னையில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான அளவில் மழை பெய்தது. இதனால், சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. பிரதான சாலைகள், உட்புற சாலைகள் என்று எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைத்து சாலைகளும் மூழ்கியது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
Marina beach sea shore extended up to the service road. @aselvarajTOI pic.twitter.com/o6me1QtFSq
— Selvaraj Arunachalam (@selvasuha) November 11, 2021
இதனால், சென்னை மெரினா கடற்கரையில் கடல் எது, கடற்கரை எது என்று தெரியாத அளவிற்கு கடலில் மழைநீர் தேங்கியுள்ளது. கடற்கரை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரைக்கு முன்பு உள்ள காமராஜர் சாலையின் அருகில் உள்ள சர்வீஸ் சாலை வரை மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அனைவரும் சர்வீஸ் சாலை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் ஆபத்தை உணராமல் மெரினா கடற்கரையில் இறங்கி விளையாடி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக தி.நகர், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, வளசரவாக்கம், வேளச்சேரி, கே.கே.நகர், கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, கிண்டி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும் மழை பாதிப்பு காரணமாக 2 ஆயிரத்து 250 பேர் வரை 44 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. அவற்றில் இதுவரை 46 இடங்களில் மட்டுமே மழைநீர் வடிந்துள்ளது. பிற பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்