ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதாகி சிறையிலிருந்த பிரபல ரவுடி நாகேந்திரன் மரணம் - பரபரப்பு பின்னணி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த பிரபல கூலிப்படைத் தலைவர் நாகேந்திரன் உயிரிழந்தார்.

எதிரிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதில் கைதேர்ந்தவர்
வடசென்னையில் 1990 - களில் , கோலோச்சிய பிரபல ரவுடி வெள்ளை ரவியும் , நாகேந்திரனும் நெருங்கிய நண்பர்கள். விஜி என்பவர் மூலம் நாகேந்திரனுக்கு வெள்ளை ரவியின் அறிமுகம் கிடைத்துள்ளது. மூன்று பேரும் கொலை , கட்டப் பஞ்சாயத்து , கொலை முயற்சிகளில் கூட்டாக ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். எதிரிகளை சரியாக ஸ்கெட் போட்டு தூக்குவதில், நாகேந்திரன் கை தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. வெள்ளை ரவியின் குழுவில் முக்கிய நபராக மாறியுள்ளார் நாகேந்திரன்.
முதல் வழக்கு - முதல் சிறை வாசம்
1990 ல் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், முதல் முறையாக வியாசர்பாடி போலீஸாரால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றார். அதன் பிறகு 1991-ல் நாகேந்திரன் மீது கொலை வழக்கு பதிவானது. இப்படி நாகேந்திரன் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி அவர் பிரபல தாதாவானார்.
அதிமுக செயலாளர் ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கு
வடசென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாகேந்தினுக்கு 1997-ல் நடந்த வியாசர்பாடியைச் சேர்ந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கு தலை வலியாக மாறியது. இந்த வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனாலும் சிறைக்குள் இருந்தபடியே தன்னுடைய கூட்டாளிகள் மூலம் வடசென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் , 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் இருக்கின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி , பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறையிலிருந்த படி தன்னுடைய மகன் அஸ்வத்தாமன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக நாகேந்திரன் மீதும் அஸ்வத்தாமன் மீதும் செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் நாகேந்திரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் நாகேந்திரனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்தது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நாகேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு நிகழ்வுகளை ஒட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமலிருக்க 250 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.





















