பிரபல ரவுடி OVR ரஞ்சித்தை அந்தமானில் தட்டித்தூக்கிய காவல்துறை.. நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்ட போலீசாரின் குற்றச்சரித்திர பதிவேடு ஆக இருந்தார் ரவுடி OVR ரஞ்சித். அந்தமானில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று சென்னை போலீஸ் சென்னை அழைத்து வருகிறது
OVR ரஞ்சித்
சென்னை சின்னமலை பகுதியைச் சேர்ந்தவர் OVR ரஞ்சித். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக இருந்து வந்தார் பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறார். மேலும் மாவட்ட தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சியில் பெறுவதற்கு கட்சி மேலிடம் சார்பில் காய்களை நகர்த்தி வந்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் இடைக்கோடு பேரூராட்சியில், 1வது வார்டு நைனார் குப்பம் கிராமத்தில் , தனது தாயை சுயேச்சையாக போட்டியிட வைத்து வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை அவர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சரித்திர பதிவேடு குற்றவாளி
சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது காஞ்சிபுரம், செய்யூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சின்னமலையில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தின் 8- வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வரும் ரஞ்சிதிக்கு வேறொரு, பெண்ணுடன் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரஞ்சித்தின் மனைவிக்கு தெரிந்து இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை இருந்து வந்துள்ளது.
ஓட்டுநர் மீது சந்தேகம்
இந்நிலையில் வேறொரு பெண்ணுடனான தொடர்பு பற்றி தனது மனைவியிடம் தனது கார் ஓட்டுநரான தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் தான் கூறியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில், கடந்த மார்ச் 31 ஆம் தேதி ஓட்டுநர் ரஞ்சித்தை அழைத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதில் வலி தாங்க முடியாமல் ஓட்டுநர் ரஞ்சித் 8வது மாடியில் இருந்து கயிறு மூலம் 3 ஆவது மாடி வரை இறங்கி பின் அங்கிருந்து, கீழே குதித்து தனது முதலாளியான ரஞ்சித்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
3-வது மாடியில் இருந்து கீழே குதித்த ஓட்டுநர் ரஞ்சித்துக்கு காலில் முறிவு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து ஓட்டுநர் ரஞ்சித் அக்கம் பக்கத்தினரால் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்குப் பதிவு
அதனைத் தொடர்ந்து மருத்துவமனை அளித்த தகவலின் அடிப்படையில் கிண்டி போலீசார் மருத்துவமனைக்குச் சென்று நடந்த சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ரஞ்சித்திடம் வாக்கு மூலமும் புகாரும் பெற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ரஞ்சித்தை தேடி சின்னமலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.
அந்தமானில் கைது
அதனைத் தொடர்ந்து ரஞ்சித்தின் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்ததில் அவர் அந்தமானுக்கு தப்பிச் சென்றதும், அங்கு தலைமறைவாக பதுங்கியிருப்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது. அதனடிப்படையில் அடையாறு துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அந்தமானுக்கு விரைந்து அங்கு குறிப்பிட்ட இடத்தில் பதுங்கியிருந்த ரஞ்சித்தை கைது செய்து அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று இன்று சென்னை அழைத்து வந்துள்ளனர். சென்னை அழைத்து வரப்பட்ட ரஞ்சித்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை கிண்டி போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.