Crime : 1.36 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்..! சென்னை விமான நிலையத்தில் சிக்கியது..!
சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 1 கோடி 36 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விமான நிலையங்கள் வழியாகவும், கடல் வழியாகவும் மர்மகும்பல் கடத்தி வருகின்றனர். இதனால், விமான நிலையங்களிலும், கடலோர பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
செனனை விமான நிலையத்திலும் கடத்தலை தடுக்க தீவிர தடுப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், துபாயில் இருந்து நேற்று முன்தினம் விமானம் ஒன்று சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த முகமது ஃபஸ்லீம் ஃபலீல் என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் பசை வடிவத்தில் 1,486 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூபாய் 65.30 லட்சம் ஆகும்.
அதேபோல, கடந்த 9-ந் தேதி துபாயில் இருந்த விமானம் ஒன்றில் வந்த மற்றொரு நபரின் நடவடிக்கைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை பரிசோதனை செய்ததில் அவர் நூதன முறையில் ரூபாய் 30 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 690 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அதேபோல, அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவர் தங்கக்கடத்தலில் ஈடுபட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 685 கிராம் அளவுள்ள 30 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவங்களைப் போலவே, கடந்த 7-ந் தேதி குவைத் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் 3 கிலோ எடை கொண்ட தங்க ஆபரணங்கள், ஒரு கிலோ எடை கொண்ட தங்க மோதிரங்களை அவர் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூபாய் 11.20 லட்சம் ஆகும்.
மேற்கண்ட நான்கு சம்பவங்களில் இருந்து 1 கோடியே 36 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பயணிகளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.