DMK Ministers Case: திமுகவிற்கு அடுத்த சிக்கல்? அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான வழக்கு பிப்.5-இல் விசாரணை - உயர்நீதிமன்றம்
DMK Minister Case: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்குகள், பிப்ரவரி 5ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
DMK Minister Case: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்குகள், பிப்ரவரி 5ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.
திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு:
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீதான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணை தீவிரமடைகிறது. அனைத்து வழக்குகளிலும் பிற்பகல் 3 மணி முதல் விசாரணை தொடங்கப்படும். அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் 3 மணிக்கு விசாரணை தொடங்கும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கமளித்துள்ளார்.
விசாரணை விவரம்:
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை ஜனவரி 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரையும், அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கில் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளிலும் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் வரிசையில் முன்னாள் அமைச்சர்களான ஓபிஎஸ் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் மறு-ஆய்வு:
இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிரான ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில், கீழமை நீதிமன்றங்களில் முறையாக விசாரணை நடைபெறவில்லை என கூறி அந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் மறு ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை மாவட்ட அளவில் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள் விடுவித்து தீர்ப்பு அளித்தன. அதேபோல, முன்னாள் அமைச்சர் பொன்முடியை, சொத்து குவிப்பு வழக்கில்
இருந்து விடுதலை செய்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புகளை எல்லாம் மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி நிராகரித்தார். இந்த நிலையில் தான், அந்த வழக்குகள் வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.