(Source: ECI/ABP News/ABP Majha)
BJP IT Wing president booked: பாஜக - தமிழ்நாடு ஐடி பிரிவுத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது சைபர் க்ரைம் வழக்கு.. முழு விவரம்..
தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்து தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றவியில் தண்டனை சட்டத்தின் பிரிவு 41 ஏ என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் வாரண்ட் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். இவை தவிர இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 153 மற்றும் 505 (ஐ)(பி), தகவல் தொடர்புச் சட்டத்தின் பிரிவு 66 டி உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நிர்மல் குமார், “எனக்கு கடந்த திங்கட்கிழமை நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில் நான் என்ன குற்றம் செய்தேன் என்பது தொடர்பாக தெளிவாக இல்லை. என் மீது தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக நான் வரும் 8-ஆம் தேதி காவல்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜக நிர்வாகி ஒருவர் அவதூறு பரப்பிய சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டார். முதல்வர் முதலீட்டாளர்களை ஈர்க்க துபாய் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் அணிந்திருந்த உடை 17 கோடி நிதியமைச்சர் தகவல் தெரிவித்திருப்பதாக சொல்லி தகவல் ஒன்றை பாஜக நிர்வாகி அருள்ராஜ் என்பவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நிதியமைச்சரை டேக் செய்திருந்தார். இந்தக் குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாடு காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் பாஜகவின் இளைஞர் பிரிவு தலைவர் வினோஜ் பி செல்வம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்