மேலும் அறிய
Advertisement
’அரக்கோணம் இரட்டை கொலையில் பாமகவிற்கு தொடர்பு’- மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் அறிக்கை
’’ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் உண்மை அறியும் குழு அறிக்கையில் இரட்டை கொலைக்கும் பாமகவிற்கும் சம்மந்தமும் இல்லை என கூறப்பட்ட நிலையில் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் இதனை மறுத்துள்ளது’’
கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டை கொலை சம்பந்தமாகச் சென்னையைச் சேர்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் என்னும் அமைப்பு உண்மை அறியும் குழு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அரக்கோணம் இரட்டை கொலை சம்பவத்தில் பாமக தரப்பினர் ஒரு விளக்கமும் மற்றும் விசிக தரப்பினர் ஒரு விளக்கமும் கொடுத்த நிலையில் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் இருவேறு உண்மை அறியும் குழுவினரின் அறிக்கை மேலும் பொது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது .
அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
— M.K.Stalin (@mkstalin) April 9, 2021
இருவரையும் இழந்து தவிப்போருக்கு ஆறுதல்!
சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும். pic.twitter.com/h7G2xHLyL5
ஐந்து மாதத்திற்கு முன்னர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் உண்மை அறியும் குழு அறிக்கையில் இந்த இரட்டை கொலைக்கும் பாமகவினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறப்பட்டது ஆனால் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை சிவகாமி ஐ.ஏ.எஸின் கருத்தை முழுவதுமாக மறுத்துள்ளது .
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் சோகனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த மறுநாள் தலித் சமூக இளைஞர்களுக்கும் வன்னிய சமூக இளைஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது . இந்த மோதலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அர்ஜுனன் (23 ) , சூர்யா (24 ) என்ற இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதில், சூர்யா மற்றும் அர்ஜுனனுக்குத் திருமணம் அண்மையில் தான் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டை கொலை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இருவரின் சடலத்தையும் வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலை நடைபெற்றவுடன் சோகனூர் சம்பவம் தொடர்பாகப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், "இந்தப் படுகொலைகளைச் செய்த சாதி வெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாக கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். காவேரிப்பாக்கம் அ.தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இந்த வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி.க வேட்பாளருக்கு ஆதரவாக சோகனுர் கிராம மக்கள் வாக்கு சேகரித்தனர். அத்துடன், பா.ம.க ஆதரிக்கும் அ.தி.மு.க வேட்பாளரை ஊருக்குள் விடவில்லை. இவற்றை எல்லாம் மனதில் வைத்தே இந்த படுகொலையை நடத்தியுள்ளனர்" என பேசியிருந்தார்.
சோகனூரில் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #அர்ஜூன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். தாங்கொணா துயரத்தால் துவண்டு கிடந்த அவரது இளம்வயது மனைவி இலட்சுமியையும் ஆறுமாத கைக் குழந்தையையும் கண்டு மனம் பதைத்தது. தங்கை இலட்சுமிக்கு ஆறுதல் கூற இயலவில்லை. என்னை நானே தேற்றிக்கொண்டேன். pic.twitter.com/f9Bx1h99aS
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 9, 2021
மேலும் இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் வட்டம் காவல் துறையினர் விசாரித்தனர். இந்த கொலையில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சமூக சமத்துவப்படை கட்சியின் தலைவியும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி தலைமையிலான உண்மை அறியும் குழுவினர் களஆய்வு மேற்கொண்டு வெளியிட அறிக்கையில் " திருமாவளவன் குறிப்பிடுவதைப் போல பாமக விற்கும் கொலை செய்த இளைஞர்களுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரில் ஒருவர் கூட பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் இல்லை எனவும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் அதிமுகவின் ஒன்றிய செயலாளர் மகன் எனவும் அவரது அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் இது தேர்தல் பின்புலத்தில் நடைபெற்ற கொலை அல்ல. சாதிய மோதல் பல ஆண்டுகளாக அந்த இரு கிராமங்களிலும் நடைபெற்று வருவதாகவும் அதன் தொடர்ச்சியாகவே இந்த மோதல் போக்கு நடைபெற்று கொலையில் முடிந்து இருப்பதாகவும் அவர்களின் உண்மை கண்டறியும் குழு கள ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த கொலை நடந்து 5 மாதங்களான நிலையில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு இடதுசாரி இயக்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அரக்கோணம் இரட்டை கொலை சம்பந்தமாக உண்மை அறியும் அறிக்கை ஒன்றை சென்ற வாரத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி குழுவின் உண்மை அறியும் அறிக்கையை மறுத்து, இது திட்டமிட்ட சாதிய படுகொலையே என்றும் பா.ம.க வை சேர்ந்த இளைஞர்களும், அதிமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் மகன்களும்தான் இந்த சாதி வெறி இரட்டை படுகொலைக்கு மிக முக்கிய காரணமானவர்கள் மேலும் இது தற்செயலாக நடந்த சம்பவமல்ல சுயசாதி வெறிகொண்ட இளைஞர்களை பயன்படுத்தி கொண்டு, திட்டமிட்டு நடத்தப்பட்ட சாதிவெறி படுகொலை என்றும் இதற்கு பின்னணியில் மணல் கொள்ளையர்களும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளனர் .
மேலும் இச்சம்பவத்தை விதிவிலக்கான சம்பவமாக கருதி அரசாங்க நிதியிலிருந்து கொலையானவர்களுக்கு தலா 50 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சமும் இழப்பீடு வழங்கவேண்டும் என்று மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாக்குமூலம் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர் பா.ரஞ்சித், எவிடென்ஸ் கதிர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கைகளை இவர்களின் உண்மை அறியும் குழு அறிக்கையில் இணைத்துள்ளது .
இந்த சம்பவம் தொடர்பாக ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சென்னை கிளை செயலாளர் மற்றும் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் கூறுகையில் இந்த சம்பவம் குருவராஜப்பேட்டை கடை தெருவிலிருந்து தொடங்கினாலும், இரட்டைக் கொலை வரை செல்ல அடிப்படையான காரணம் சாதிவெறிதான், வெறும் தனிநபர் மோதலோ, சண்டையோ இல்லை. மேலும் சோகனூரை சேர்ந்த தலித் இளைஞர்கள் நெல் குடோனிற்கும், டிராக்டருக்கும் தீ வைத்துவிட்டதாகக் கொடுக்கப்பட்ட எதிர்புகார் முற்றிலும் பொய்யானது. இரட்டை படுகொலையை இருதரப்பினருக்கு இடையிலான மோதலாகச் சித்தரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியே, இந்த பொய் வழக்கை உடனடியாக தமிழக அரசு தலையிட்டு ரத்து செய்ய வேண்டும்.
மேலும் போல் மறுமொரு சாதிய கொலை நடக்காத வண்ணம் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் “ஊர்-சேரி” என சாதி - தீண்டாமையின் சாட்சிகளை களைத்து சாதிய பதற்றம் இல்லாத சில கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு அனைத்து சாதியினரும் வாழும் தெருக்களில் தலித் மக்களுக்கும் வீடுகட்டி கொடுத்து சாதி பாகுபாடில்லாமல் சமத்துவமாய் வாழ முன்னோடி முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பாக தமிழக அரசுக்கு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion