ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்....அதிரடியில் இறங்கிய போலீஸ்; 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு..!
ஏ சி டி சி நிறுவனத்தின் மீது கானத்தூர் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் செப்டம்பர் 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.
முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், கானாத்தூர் போலீசார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தின் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன ?
கானத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கானத்தூர் காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் விவரம் பின்வருமாறு : கடந்த ஜனவரி மாதம் 2023ஆம் காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 27/7/2023 ஆம் தேதி ஏ சி டி சி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் ஏமநாத் என்பவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் 12/8/2023 ஆம் தேதி மாலை 6 மணி முதல் நடைபெற உள்ள பனையூர் சென்னையில் உள்ள ஆதித்யா ராம் மைதானத்தில் மறக்குமா நெஞ்சம் என்ற ஏ ஆர் ரகுமானின் நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதில் சுமார் 20,000 பொதுமக்கள் ஏழு பிரிவுகளில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும், மேற்படி இடத்தில் பொதுமக்கள் வருகைக்கு போக்குவரத்து வாகனங்கள் நிறுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு சுமார் 400 செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். பிறகு 10/8/2023ஆம் தேதி கானாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகிய நான் ஆய்வு செய்தேன்.
ஏ.சி.டி.சி ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்ததை போல் 20 ஆயிரம் மக்கள் அமர இடம் உள்ளதாக மேலும் போக்குவரத்து வாகனம் நிறுத்துவதற்கு உரிய வசதி உள்ளது என்று தெரிந்து கொண்டேன். 12/ 8/ 2023 இல் நடக்க இருந்த நேரடி இன்னிசை நிகழ்ச்சி பலத்த மழையின் காரணமாக அன்றைய தினம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதற்கு பதிலாக மாற்றுத் தேதி 10/9/ 2023 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. 10/9/2023 ஆம் தேதி நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறை சார்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசார் 669 மற்றும் போக்குவரத்து காவல் போலீசார் 204 பேர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டனர் ஏ.சி.டி.சி நிர்வாகிகள் கூறியது போல் இல்லாமல் அளவிற்க்கு அதிகமான பார்வையாளர்கள் குவிந்தனர்.
இதனால் வாகன நிறத்தை இடம் இல்லாமல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மற்றும் பார்வையாளர்கள் அமர இடமில்லாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் உயிர் சேதம் ஏற்படும் நிலை உருவானது காவல்துறையில் பெரும் முயற்சியால் எந்த உயிர் சேதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. மேலும் பின்பு விசாரணை செய்ததில் ஏசிடிசி நிர்வாகிகள் உறுதி அளித்த 20000 பார்வையாளர்களுக்கு அதிகமானோர் பார்வையிடுவதற்கு அனுமதி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. பொதுமக்கள் என்னிடம் நேரடியாக தெரிவித்ததில் இருந்து சமூக வலைதளங்கள் செய்தி ஊடகங்கள் மூலமாகவும் சுமார் 45 ஆயிரம் அனுமதி சீட்டுகளை ஏசிடிசி நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தெரிய வருகிறது.
எனவே பொதுமக்களிடம் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக பணத்தை வசூல் செய்து அதற்கு உண்டான வசதியை செய்து கொடுக்காமல் பொதுமக்களுக்கு மோசடி செய்ததாகவும் மற்றும் தன்னுடைய சுயலாபத்திற்காக எடுத்துக் கொண்டதாக தெரிய வருகிறது. எனவே காவல்துறை வழங்கி அனுமதி மற்றும் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தையும் பெரும் போக்குவரத்து இடஞ்சலையும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஏ சி டி சி நிர்வாகம் மற்றும் பொதும க்களுக்கு மோசடி செய்ததால் அவர்கள் மீது சட்டை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஆய்வாளர் தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து 138 மற்றும் 188 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்