மேலும் அறிய
Advertisement
கல்வி நிறுவனங்களில் நடக்கும் மரணங்கள்; போலீசாரே விசாரிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
கல்வி நிறுவனங்களில் நடக்கும் இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு திருத்தம்.சம்பந்தப்பட்ட போலீசாரே விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீசாரே விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலிசார் விசாரிக்க வேண்டுமெனவும், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின் தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீசாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஜூலை 18ம் தேதி உத்தரவுக்கு பிறகு தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 11 மரணங்கள் குறித்த வழக்குகள் சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்கென பிரத்யேகமாக சிபிசிஐடி உருவாக்கப்பட்டதாகவும், எந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென வழக்கின் தன்மை குறித்து டிஜிபி முடிவு செய்வதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீசாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணம் குறித்து கல்வித்துறை விசாரித்த பிறகே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவு காரணமாக ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவையும் மாற்றியமைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்ற நீதிபதி, கல்வி நிலையங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலிசாரே விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவு மாற்றியமைத்து உத்தரவிட்டார். இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலிசாரே விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல , கல்வித்துறை விசாரணைக்கு பின்னர் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைத்த நீதிபதி சதிஷ்குமார், வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார். மேலும், மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
ஆட்டோவில் குழந்தைகள் விளையாடியதை தட்டிக் கேட்டவரை கொலை செய்ய முயற்சித்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் தெரு அருகே கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அப்பகுதியில் நின்ற ஆட்டோவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை சரவணன் (35) என்பவர் கண்டித்துள்ளார்.
தன் குழந்தைகளை கண்டித்த சரவணனிடம் குழந்தையின் தந்தை குமார் (45) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் குமாரை சரவணன் கத்தியால் குத்தியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த குமார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி சுமதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் சரவணன் மீது கொலை முயற்சி, அவதூறாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் சென்னை மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பகவதி ராஜ் ஆஜராகி குழந்தைகள் முன்னிலையில் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்றும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion