‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய நூல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
நூல் வெளியிட்டு விழா: அந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். கருணாநிதி உடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றியுள்ளார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து குழுமத்தின் என்.ராம் ஆகியோர் ஆய்வுரை வழங்குகினர். நூலை எழுதிய அமைச்சர் வேலு ஏற்புரையும் சீதை பதிப்பகத்தைச் சேர்ந்த கவுரா ராஜசேகர் நன்றியுரையாற்றினார்.
கருணாநிதி படைத்த சாதனைகள்:
ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வல்லமை பெற்றவர் கருணாநிதி.
10 ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லாவிட்டாலும், கட்டுக்கோப்புடன் கட்சியை வழிநடத்தி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தவர். 18 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றி, தமிழ்நாட்டின் நீண்டகால முதலமைச்சர் என்ற பெருமை பெற்றவர்.
தமிழர்களின் பல பிரச்னைகளுக்கு பேனா முனையை கொண்டு அனல் பறக்க எழுதிய கடிதங்கள் வாயிலாகவே தீர்வு கண்டு மானம் காத்தவர். மாநில அரசியல் என சுருங்கி விடாமல், தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்று மத்தியில் நிலையான ஆட்சி அமைய பங்காற்றியவர்.
அவர் கொண்டு வந்த பல தொலைநோக்கு திட்டங்கள் தான், இன்று தேசிய அளவில் முன்மாதிரியாக உள்ளன. எல்லாருக்கும், எல்லாமும் என அறைகூவலிட்டதோடு, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்தவர். திமுக எனும் பெரும் வரலாறு கொண்ட கட்சிக்கு 10 முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.