சென்னையில் அதிர்ச்சி ; 14 வயது சிறுமியை கட்டாய குழந்தை திருமணம் செய்த இளைஞர்
சென்னையில் நடந்த குற்ற சம்பவங்களை கீழே காணலாம்

14 வயது சிறுமியை கட்டாய குழந்தை திருமணம் செய்த இளைஞர்
சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை , அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் ( வயது 26 ) மற்றும் அவரது பெற்றோர் பெண் கேட்டு நச்சரித்து வந்துள்ளனர். அதனால் , கடந்த மாதம் 24 - ம் தேதி , இரு வீட்டாரின் சம்மதத்தோடு , பெசன்ட் நகர் சர்ச்சில் திருமணம் நடந்துள்ளது. அன்றே சிறுமியை விக்னேஷ்குமார் தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
மறுநாள் தன் பெற்றோர் வீட்டுக்கு வந்த சிறுமியை பார்க்க வந்த தோழியர் '181' என்ற குழந்தைகள் நல எண்ணில் தொடர்பு கொண்டனர். விருப்பமின்றி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து , கடந்த மாதம் 25 - ம் தேதி , குழந்தைகள் நல அலுவலர்கள் , சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். பின், 29 - ம் தேதி பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். குழந்தை திருமணம் குறித்து நகர நல அலுவலர் , புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, விக்னேஷ்குமார் மற்றும் இரு தரப்பு பெற்றோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் காதல் , பாலியல் அத்துமீறல் - திருமணம் செய்ய 50 சவரன் நகை டிமான்ட்
சென்னை திருமங்கலம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் , முகப்பேர் மேற்கு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆதித்யன் ( வயது 31 ) என்பவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக என்னுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பழகி வந்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி , பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக அத்துமீறினார்.
இந்நிலையில் , வரும் டிசம்பர் மாதம் எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஆதித்யன் தற்போது 50 சவரன் நகை வரதட்சணையாக கேட்கிறார். இது குறித்து எனது பெற்றோர் , ஆதித்யன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் முறையிட்ட போது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்யனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கணவன் கண் முன்னே மனைவி உடல் , கன்டெய்னர் லாரியில் நசுங்கி பலி
சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் யூசப்கான் ( வயது 45 ) அவரின் மனைவி நஸ்ரீன் கான் ( வயது 45 ) இருவரும் அதே பகுதியில் சிக்கன் பகோடா கடை நடத்தி வருகின்றனர். தாம்பரத்தில் உள்ள உறவினரின் இறப்பு நிகழ்ச்சிக்காக , இருவரும் 'ஹோண்டா ஆக்டிவா' இரு சக்கர வாகனத்தில் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றுள்ளனர்.
அப்போது நொளம்பூர் மேம்பாலம் அருகில், அதே வழியாக சென்ற கன்டெய்னர் லாரி , இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் , இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளனர். அப்போது யூசப்கான் கண்முன்னே நஸ்ரீன் கான் மீது கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் , நஸ்ரீன் கானின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநரான , ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சர்ஜு யாதவ் ( வயது 45 ) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.





















