ஏலச்சீட்டு மோசடி ; 37 லட்சம் ஏமாந்த மக்கள் !! தாய், மகன், மருமகள் கைது
ஏலச்சீட்டு நடத்தி 19 நபர்களிடம் ரூ.37.87 இலட்சம் பண மோசடி செய்த தாய், மகன் மற்றும் மருமகள் கைது.

ஏலச்சீட்டு மோசடி ; 37 லட்சம் ஏமாந்த மக்கள் !! தாய், மகன், மருமகள் கைது
சென்னை பழவந்தாங்கல் B.V. நகர் 4 - வது தெருவில் சீனிவாசன் ( வயது 51 ) என்பவர் வசித்து வருவதாகவும் , இவரது வீட்டின் அருகாமையில் வசித்து வந்த தனலட்சுமி என்பவர் சுமார் 10 வருடங்களாக ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு துணையாக இவரது மகன் பாலாஜி, மருமகள் லாவண்யா மற்றும் 2 மகள்கள் சீட்டு சம்மந்தமாக பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2024 - ம் ஆண்டு சீனிவாசன் மற்றும் 18 நபர்கள் தனலட்சுமி நடத்தி வந்த ரூ.5 இலட்சம், ரூ.2 இலட்சம், ரூ.1 இலட்சம் ஆகிய மாதாந்திர ஏலச் சீட்டுகளில் சேர்ந்து பிப்ரவரி-2024 முதல் மார்ச்-2025 வரை பணம் செலுத்தி வந்துள்ளனர்.
19 நபர்களும் சுமார் 37.87 இலட்சம் பணம் செலுத்திய நிலையில், தனலட்சுமி ஏப்ரல் 2025 ம் மாதம் திடீரென அவரது வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி உள்ளார். எங்களது சீட்டு பணத்தை ஏமாற்றி மோசடி செய்த தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தரும்படி சீனிவாசன் உட்பட 19 நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து ஏலச் சீட்டு பணத்தை மோசடி செய்து கோவிலம்பாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த தனலட்சுமி ( வயது 63 ) , பாலாஜி ( வயது 40 ) பாலாஜியின் மனைவி லாவண்யா ( வயது 31 ) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புயை மற்ற தலைமறைவான நபர்களை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.





















