சிறையில் இருந்து விடுதலையாகி கொலை - முன்கூட்டியே விடுதலை செய்ததற்கான உத்தரவு ரத்து
’’இருவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக மதுரை மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’’
மதுரை காளவாசல் பகுதியைச்சேர்ந்த இளவரசி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். எனது கணவரை உமாசங்கர் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக சந்திக்குமாறு தெரிவித்தார். எனது கணவரிடம் செல்போனில் பேசியபோது, உமாசங்கர், சாய்பிரசாத், சுரேஷ் பாண்டியன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டது தெரிந்தது. சிறிது நேரத்தில் என் கணவரை அவர்கள் கொடூரமாக கொன்றதாகவும், அவர்களை போலீசார் கைது செய்ததும் தெரிந்தது. உமா சங்கரும், சாய் பிரசாத்தும் கடந்த 2005 ஆம் ஆண்டில் குமரகுரு என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்து, தமிழக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்துள்ளது. வெளியில் வந்த பின்பு தான் என் கணவரை கொலை செய்துள்ளனர். அவர்கள் முன்கூட்டியே விடுதலையானபோது, எதிர்காலங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்ற சிறைத்துறையின் நிபந்தனைகளை மீறியுள்ளனர். எனவே அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்யவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உள்துறை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன் ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில்,முன் கூட்டிய விடுதலை என்பது அவர்களை திருத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. அவ்வாறு முன் கூட்டி விடுதலை செய்யப்படுபவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அரசு அதை வேடிக்கை பார்க்காது பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய உமாசங்கர், சாய்பிரசாத் ஆகிய இருவரையும் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக மதுரை மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.