மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
" மாமல்லபுரத்தில் 37 டன் கருங்கல்லில் 8 மாதங்களில் வடிவமைக்கப்பட்டு தயாரான 20 அடி உயர சிவன் சிலை மைசூருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது "
மாமல்லபுரத்தில் 37 டன் கருங்கல்லில் தயாரான 2 அடி உயர சிவன் சிலை மைசூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பிறகு கோவில் எழுப்பி பக்தர்களுக்கு அபய கோலத்தில் அருள்பாளிக்க உள்ளார்.
சிற்ப நகரம் மாமல்லபுரம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் உள்ள கடற்கரை கோயில் உலகப் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் மாமல்லபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் பகுதியில் , பல நூற்றாண்டுகளாகவே சிற்பம் செய்வது பாரம்பரிய தொழிலாக இருந்து வருகிறது. மாமல்லபுரம் பகுதியில் செய்யப்படும் சிற்பங்கள் உலக அளவில் மட்டும் இல்லாமல் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது. மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் மாமல்லபுரத்தில் சிற்பங்களை ஆர்டர் கொடுத்து செய்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. மாமல்லபுரத்தில் கிடைக்கும் சிற்பங்களில் நேர்த்தி, பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பல்லவர்கள் பாணி சிற்பக்கலை
அந்தவகையில், மாமல்லபுரம் ஐந்துரதம் சாலையில் உள்ள ஒரு சிற்பக்கலை கூடத்தில் 37 டன் கருங்கல்லில் 20 அடி உயரத்தில் சிவன் சிலை அழகுர வடிவமைக்கப்பட்டு உள்ளது. அனுபவம் வாய்ந்த மாமல்லபுரம் சிற்பக்கலைஞர் பி.எஸ்.பூபதி என்பவர் சைவ ஆகம விதிப்படி வரைபடம் தயாரித்து நேர்த்தியான முறையில் பல்லவர்களின் சிற்பக்கலை பாணியை பின்பற்றி, முழுக்க, முழுக்க உளி, சுத்தியல் கொண்டு இச்சிலையை நேர்த்தியான முறையில் வடிமைத்துள்ளார்.
கடந்த 8 மாதமாக சிற்பி பூபதியுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்கள் இச்சிலையை இரவு, பகல் பாராமல் நுணுக்கத்துடன் தென் இந்திய சிற்பக்கலைக்கு பெயரும், புகழும் சேர்க்கும் வகையில் இச்சிலையை வடிவமைத்துள்ளனர். இச்சிலையின் உச்சியில் கங்காதேவி சிவனை வணங்குவது போன்றும், அதேபோல் சிவன் ஒரு கையில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும், மற்றொரு கையில் வேல் பிடித்திருப்பது போன்றும், கழுத்திலும், காலிலும் நல்லபாம்பு படம் எடுப்பதுபோன்றும், சிவனின் பாதத்தின் கீழ் அவரது வாகனமான மான் உள்ளது போன்றும் பக்தர்கள் பார்த்து ரசித்து வணங்கும் வகையில் அழுகுர வடிவமைக்கப்பட்டு இச்சிலை காட்சி அளிக்கிறது.
மைசூருக்கு செல்லும் சிவன் சிலை
இதுபோன்ற சிற்பங்கள் மிக அரிதான ஒன்று என கூறப்படுகிறது. முழுவதும் செய்து முடிக்கப்பட்ட இச்சிலை கிரேன் மூலம் தூக்கி நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய யாத்திரை ஸ்தலங்களில் இதுமாதிரியான சிவன் சிலைகளை காணலாம். மாமல்லபுரத்தில் வடிவமைமைக்கப்பட்ட இந்த 20 அடி உயர சிவன் சிலை கர்நாடகா மாநிலம், மைசூர் நகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்பு அங்கு சிவன் கோயில் கட்டப்பட உள்ளது.
பெரும்பாலும் பல்வேறு இடங்களில் முதலில் கோயில் கட்டப்பட்டு சுவாமி சிலைகள் கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால் மைசூரில் இந்த சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகுதான் அங்கு கோயில் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சிவன் சிலை கனரக லாரி மூலம் மைசூருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இச்சிலையை வடிவமைத்த சிற்பக்கலைஞர் பி.எஸ்.பூபதி இதேபோல் பல்வேறு உயரமான கற்சிலைகளை செதுக்கி, தயார் செய்து ஐரோப்பா நாடுகளில் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் கட்டப்படும் கோயில்களுக்கு கப்பல் மூலம் அனுப்பி உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், சிலையை ஆர்வமுடன் பார்த்து விட்டு செல்கின்றனர்.