திருப்போரூர்: பட்டப்பகலில் கத்தியுடன் ரவுடிகள் அட்டகாசம்! வியாபாரியை வெட்டியதால் பரபரப்பு, போலீசார் அதிரடி கைது!
"செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பட்ட பகலில் கத்தியுடன் சுத்தித் திரியும் ரவுடிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்"

கொட்டமேடு பகுதியில் ரவுடிகள் கத்தியைக் காட்டி கடைகளை அடித்து உடைத்த மற்றும் இளைஞர்களை வெட்டிய சிசிடிவி காட்சிகளும், இளைஞர்களைக் கத்தியால் வெட்ட ஓட ஓட விரட்டிய செல்போன் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
வைரல் சிசிடிவி காட்சிகள்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த சேது (எ) சேதுராமன் @ பில்லா (வயது 21) கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருப்போரூர் - செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலை கொட்டமேடு சந்திப்பில் சேது (எ) சேதுராமன் @ பில்லா பட்டபகலில் கத்தியை கையில் வைத்துக் கொண்டு சில இளைஞர்களை விரட்டி வெட்ட முயற்சிக்கும் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாய் பரவி வருகிறது.
மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகள்
குறிப்பாக கொட்டமேடு, நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் சமீப காலமாக சில ரவுடிகள் ஒன்று சேர்ந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீதிகளில் சுற்றித் திரிவதாகவும், டீக்கடைகள், ஓட்டல்களில் பணம் கொடுக்காமல் பொருள்களை எடுத்துச் செல்வதாகவும், வாரந்தோறும் மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும் வியாபாரிகளின் தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
ரவுடியை கைது செய்த போலீசார்
கடந்த 6 மாதத்திற்கு முன்பு கொட்டமேடு ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால், தர மறுத்து கண்ணாடி பாட்டில்களை தூக்கிப்போட்டு உடைத்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுவதும், டீக்கடைகளில் சிகரெட் வாங்கி பணம் கொடுக்காமல் செல்வது, கடை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடித்தனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு கைது கொட்டமேடு பகுதியில் உள்ள ஹோட்டலுக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுவது, டீக்கடைகளில் அடித்து நொறுக்குவது, கத்தியை காட்டி மிரட்டுவது, சாலைகளில் இளைஞர்களை அரிவாளால் ஓட ஓட வெட்ட முயற்சி செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்..
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ரவுடிசம் செய்து சிறைக்குச் சென்று வெளியே வந்து நானும் இளம் ரவுடிதான் என்று மீண்டும் அட்ராசிட்டி செய்து வந்து அந்த வீடியோவை காட்டி நெல்லிக்குப்பம் வியாபாரிகளை மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் சிறையில் இருந்து வெளிவந்த சேது என்கின்ற சேதுராமன் அடிக்கடி சிகரெட் இலவசமாக கேட்டுள்ளனர். அதற்கு கடை வியாபாரி இல்லை என்று கூறியதால் பட்டபகலில் கடை வியாபாரியின் கையை வெட்டி காயம் ஏற்படுத்தி உள்ளனர்.
சிறையில் அடைப்பு
மேலும், சேதுவும் அவனது நண்பர்களும் வியாபாரிகளை குறி வைத்து மிரட்டி பணம் பிடுங்குவது தொடர்கதை ஆகியுள்ளதாக குற்றச்சாட்டில் எழுந்துள்ளது. இதையடுத்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், காயார் போலீஸ் எஸ்.ஐ. ரமேஷ் ஆகியோர் நெல்லிக்குப்பத்தில், அரிவாளுடன் வலம் வந்து ரவுடி மாமூல் கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் சேது என்கிற பில்லா (21) என்ற நபரை கைது செய்து, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சாக்கு அடிமையாகி, இதுபோன்று கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையம் எழுந்துள்ளது.





















