Chengalpattu: மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும் - செங்கல்பட்டு புதிய ஆட்சியர் உறுதி
ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால் மக்கள் பணியாற்ற உதவும் என செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ் நம்பிக்கை
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட எஸ்.அருண்ராஜ் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
கடந்த 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக எஸ். அருண்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக எஸ். அருண்ராஜ் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.
புதிய மாவட்டம் உருவாக்கியதில் இருந்து மூன்றாவது ஆசிரியராக பதவி ஏற்றுள்ளஎஸ். அருண் ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டமாக இருந்தாலும், செங்கல்பட்டு ஏற்கனவே மாவட்ட அந்தஸ்து பெற்ற மாவட்டமாக இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாகவும் செங்கல்பட்டு மாவட்டம் விளங்குகிறது. ஏரிகள் நிறைந்த மாவட்டமாகவும் செங்கல்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்பொழுது, நான் பயிற்சி ஆட்சியராக இங்கு தான் பணியாற்றினேன். என்னுடைய பணி தொடங்கியதே, இந்த மாவட்டத்தில் தான் எனவே இந்த மாவட்டத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். தொடர்ந்து இந்த மாவட்டத்தை குறித்து, ஆராய்ந்து மக்கள் பிரச்சனைகள் உடனடியாக தீர்வு காணக்கூடியவைகளில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சில பிரச்சனைகள் அரசு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிலை இருந்தால் அவை வேகமாக பின்பற்றப்பட்டு மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.