மொத்தமா மாறப்போகும் செங்கல்பட்டு.. 25 ஆண்டுகால நெரிசலுக்கு தீர்வு.. கீழே வணிக வளாகம், மேலே பேருந்து நிலையம்.!
Chengalpattu New Bus Stand: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, வளர்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. புறநகர் பகுதி என்பதால், ஏராளமானவர்கள் செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வேலைக்காக, தினமும் சென்று வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெரிசலால் அவதி அடைந்து வருகின்றது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் - Chengalpattu New Bus Stand
செங்கல்பட்டு நகர் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இது அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் இப்போது மக்கள் தொகை அதிகரித்து இருப்பதால் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நெரிசல் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், மதுராந்தகம், தாம்பரம், திருப்பதி, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
அடிப்படை வசதி இல்லாமல் பயணிகள் அவதி
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். முறையான இருக்கை வசதி கூட இல்லாததால் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பை அடைந்து வருகின்றனர். செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பாழடைந்து, பார்ப்பதற்கே மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. எனவே செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
நிதி ஒதுக்கிய தமிழக அரசு
எனவே செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு செங்கல்பட்டிற்கு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் கீழ்தளத்தில் வணிக வளாகம், முதல் தளத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள் வந்து செல்லும் வகையில், புதிய கட்டிடம் கட்ட அறிக்கை தயார் செய்து நகராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பியுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக டெண்டர் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் செங்கல்பட்டு மலையடி வேண்பாக்கம் பகுதியில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறநகர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து, தொலைதூரங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். அதுவே செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து, நகரப் பேருந்துகள் மற்றும் அருகில் உள்ள நகரங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















