”அது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை..எங்களுடையது இல்லை!” – ஷாக் கொடுக்கும் பா.ஜ.க.,
குடியுரிமைச் சட்டத்திருத்தத் மசோதாவை நிறைவேற்றுவது குறித்தான வாக்கெடுப்பில் அ.தி.மு.க.,வின் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த நிலையில் அந்தக் கட்சியின் ஓ.பி.ரவீந்திரநாத் அதற்கு ஆதரவாக வாக்களித்தது இங்கே குறிப்பிடத்தக்கது
ஏப்ரலில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது ஆளும் அ.தி.மு.க. அரசு. இலவச வாஷிங்மெஷின், மாணவர்களுக்கான 2 ஜிபி டேட்டா, இலவச கேபிள் இணைப்பு, எரிபொருள் விலைக்குறைப்பு என இலவசங்கள் அறிக்கையில் ஒருபக்கம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. மற்றொருபக்கம் கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட நிரந்தர அறிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு ஹைலைட்டாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் எனத் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது அ.தி.மு.க.,
ஆனால் அ.தி.மு.க.,வின் இந்த அறிவிப்புகள் குறித்துத் தங்களிடம் கலந்தாலோசிக்கவே இல்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறது தமிழக பாரதிய ஜனதா. இது குறித்துப் பேசியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி ”இந்தச் சட்டத்தின் வழியாக நாங்கள் ஐம்பது அறுபது ஆண்டுக்காலமாக குடியுரிமை இல்லாமல் வாழ்ந்த மக்களுக்காகக் குடியுரிமை அளித்திருக்கிறோம். மற்றபடி நாங்கள் எந்த மக்களின் வாழ்வுரிமையையும் பறிக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை. எங்களது மத்திய ஆட்சியில்தான் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. அவர்களில் பலர் தற்போது தாயகம் திரும்பி அங்கே அரசியலில் பல உயர்பதவிகளை வகிக்கிறார்கள். அதனால் குடியுரிமைச் சட்டதிருத்தம் மக்கள்நலனுக்கு எதிரானது என்பதே தவறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்திருத்தம் திரும்பப்பெறுதல் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “எங்கள் அரசு எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவானது. அதனால் மத்திய அரசிடம் சி.ஏ.ஏ., திரும்பப் பெறுவது குறித்து வலியுறுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் குடியுரிமைச் சட்டத்திருத்தத் மசோதாவை நிறைவேற்றுவது குறித்தான வாக்கெடுப்பில் அ.தி.மு.க.,வின் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த நிலையில் அந்தக் கட்சியின் ஓ.பி.ரவீந்திரநாத் அதற்கு ஆதரவாக வாக்களித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.