Thoothukudi : மாலத்தீவு அருகே சூறாவளியில் சிக்கிய தூத்துக்குடி படகு - கடலில் சிக்கி உயிரிழந்த மாலுமி
தூத்துக்குடியில் இருந்து சரக்குச்சென்ற படகு மாலத்தீவு அருகே சூறாவளியில் சிக்கியதில், மாலுமி ஒருவர் கடலில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி இருந்து மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றிச் சென்ற படகு கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 6 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் தவறி விழுந்த ஒரு மாலுமி உயிரிழந்தார். அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு, லட்சத்தீவு, இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு தோணிகள் மூலம் பல்வேறு சரக்குகள் ஏற்றி செல்லப்படுகிறது. அவ்வாறு கடந்த 28.09.2022 அன்று மாலை 3 மணிக்கு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து ரைமண்ட் என்பவருக்கு சொந்தமான எஸ்தர் ராஜாத்தி (டிடிஎன் 220) என்ற பெயர் கொண்ட படகு சுமார் 250 டன் அளவில் கட்டுமான பொருட்கள் மற்றும் காய்கறி போன்ற சரக்குக்களை ஏற்றிக் கொண்டு மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த படகில் தூத்துக்குடியை சேர்ந்த 7 மாலுமிகள் இருந்தனர்.
இந்த படகு நேற்று (அக்.1) அதிகாலையில் மாலத்தீவு அருகே சுமார் 50 கடல் மைல் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட கடும் சூறாவளியில் சிக்கிக் கொண்டது. இதனால் தோணி கொஞ்சம், கொஞ்சமாக கடலில் மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து தோணியில் இருந்த மாலுமிகள் அவசரகால சமிக்ஞை கருவிகள் மூலம் கடலோர பாதுகாப்பு படை தளத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு தளத்தில் இருந்து அந்த வழியாக மாலத்தீவு நோக்கி வந்து கொண்டிருந்க எம்.வி.பரத்வாஜ் என்ற சரக்கு கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சரக்கு கப்பல் அந்த பகுதிக்கு விரைந்து மூழ்கிக் கொண்டிருந்த படகில் தத்தளித்த 7 மாலுமிகளையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது கப்பலில் ஏற முயன்ற போது தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டான்லி என்ற மாலுமி தவறி கடலில் விழுந்துவிட்டார். மற்ற 6 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் விழுந்த ஸ்டான்லி சூறாவளியில் சிக்கி உயிரிழந்தார். தொடர்ந்து கப்பலில் இருந்தவர்கள் போராடி அவரது சடலத்தை மீட்டனர். இதேநேரத்தில் படகு முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டது.
பத்திரமாக மீட்கப்பட்ட சகாய கிளிபட், லூர்து தொம்மை, ஆண்டன் ராஜேந்திரன், மில்டன், ஆண்டன் வாஸ்டின், லிங்கராஜ் ஆகிய 6 மாலுமிகளும் மாலத்தீவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், ஸ்டான்லியின் சடலமும் அதே கப்பல் மூலம் மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த மாலுமி ஸ்டான்லியின் உடல் மாலத்தீவு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 6 மாலுமிகளும் அங்குள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
6 மாலுமிகளை தூத்துக்குடிக்கு அழைத்து வரவும், உயிரிழந்த ஸ்டான்லியின் உடலை கொண்டுவரவும் மாலத்தீவு தமிழ்ச்சங்கத்தின் உதவியோடு, தூத்துக்குடி கோஸ்டல் தோணி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரின்ஸ்டன் பர்னாண்டோ, செயலாளர் லசிங்டன் பர்னாண்டோ, இணை செயலாளர் கிஷோர் மற்றம் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்