Sapta Sagaradaache Ello - Side A: கன்னடத்தில் ஒரு ‘சீதா ராமம்’.. கிளாசிக் காதலை சொன்ன 'சப்த சாகரடாச்சே எல்லோ' பட விமர்சனம்!
ரக்ஷித் ஷெட்டி, ருக்மினி வசந்த் உள்ளிட்டவர்கள் நடித்து ரொமாண்டிக் டிராமாவாக எடுக்கப்பட்டிருக்கும் சப்த சாகரதாச்சே எல்லோ ( ஏழு கடல்களுக்கு அப்பால்) படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்!
Hemanth Rao
RAKSHIT SHETTY . RUKMINI VASANTH ,
கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ (ஏழு கடல்களுக்கு அப்பால்) . ரக்ஷித் ஷெட்டி, ருக்மினி வசந்த் உள்ளிட்டவர்கள் நடித்து ரொமாண்டிக் டிராமாவாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
ஓப்பன் பண்ணா...
விலையுயர்ந்த ஒரு கார் அதிவேகமாக ஒரு சாலையில் செல்கிறது. காரை ஓட்டிச் செல்பவர் படத்தின் ஹீரோ மனு (ரக்ஷித் ஷெட்டி). மனுவை வேகத்தைக் குறைக்கச் சொல்லுகிறார் ஹீரோயின் பிரியா(ருக்மினி வசந்த்). ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடையும் பிரியா காரை நிறுத்தச் சொல்கிறார். கார் நின்றவுடன் வேகமாக இறங்கி நடக்கத் தொடங்குகிறார். அவருக்கு பின்னால் வந்து மன்னிப்புக் கேட்கிறான் மனு.
பிரியா: இந்தக் காரோட விலை என்ன?
மனு : 1 – 2 கோடி இருக்கும்..
பிரியா: உன்னோட சம்பளம் 12,000, ஒருவேள இந்தக் காருக்கும் ஏதாவது ஆனா இந்தக் காரோட கடன அடைக்க மொத்தம் 80 வருஷம் உன் முதலாளிகிட்ட வேலை செய்யனும்.
மனு: அதான் ஒன்னும் ஆகலயே. என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா…?
பிரியா: இது நம்பிக்க பத்தின விஷயம் இல்ல மனு…
படத்தின் முதல் காட்சியிலேயே எந்த ஒரு விஷயத்தின் தீவிரமும் தெரியாமல் தன்போக்கில் இருப்பவன் மனு என்றும், நிதானமாக யோசிக்கக் கூடிய ஒரு பெண்ணான பிரியா, மனு எத்தனைத் தவறுகள் செய்தாலும் அவனை மன்னிக்கக் கூடியவளாக இருப்பதும் நமக்கு தெரியவரும்.
சில நேரங்களில் மனுவின் செயல்கள் எல்லாம் நம்மை லேசாக எரிச்சலூட்டும் படியாக இருந்தாலும், அவன் பிரியாவை நேசிக்கும் விதங்களை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் பிரியாவின் அன்பிற்கு கட்டுப்பட்டவனாக அவன் இருப்பதுமே மனுவின் கதாபாத்திரத்தை நமக்கு பிடிக்க வைக்கிறது.
டிரைவராக பெரிய தொழிலதிபரிடம் வேலை செய்து வரும் மனு, அவன் காதலி பிரியா. மிக அழகாக பாடக்கூடியவள். பிரியாவுக்கு இந்த உலகத்தில் அதிகம் பிடித்த ஒரு விஷயம் என்றால் கடல். தனது காதலன் மனுவுடன் பெங்களூரு மாதிரியான ஒரு நகரத்தில் இல்லாமல், ஒரு கடலோர கிராமாத்தில் ஒரு சின்ன வீட்டில் வாழ வேண்டும் என்பதே பிரியாவின் ஆசை.
இந்த ஆசையை நிறைவேற்ற மனு நினைக்கிறான், ஆனால் அவனிடம் அதற்கான பணம் இல்லை. அப்படியான நிலையில் மனு ஒரு பழியை ஏற்று சிறை சென்றால் பிரியாவின் ஆசையை நிறைவேற்றலாம் எனும் வாய்ப்பு கிடைக்கிறது.
மூன்றே மாதங்களில் வெளியே வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் சிறைக்கு செல்லும் மனு, பல்வேறு சவால்களை அங்கு எதிர்கொள்கிறான். இறுதியில் நடப்பது என்ன... மனு பிரியா இணைந்தார்களா என்பதே இந்தப் படத்தின் கதை.
மாடர்ன் யுகத்தில் கிளாசிக் காதல்!
மொத்தம் இரண்டு பாகங்களாக எடுக்கப் பட்டிருக்கும் கதையின் முடிவு கொஞ்சம் திருப்தியானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் மிகப்பெரிய பக்கபலம் என்றால் மனு மற்றும் பிரியாவின் காதல் காட்சிகள் எந்த வகையிலும் ஒரு வழக்கமான சினிமாவைப் போல் இல்லாமல் எதார்த்தமான இரு காதலர்களின் கதையை ஒருவிதமான காவியச் சாயலில் சொல்கிறது படம்.
முதல் பாதி முழுவது மனு மற்றும் பிரியாவுக்கு இடையிலான மிக அழகான காதல் காட்சிகளால் நிறைந்திருக்க, இரண்டாம் பாதி முழுவதும் இவர்களின் பிரிவின் வலிகளையே மையமாக காட்டுகிறது. ஒவ்வொரு காட்சியையும் உணர்ச்சிகரமாக மாற்றுகிறது படத்தின் இசை!
அதே நேரம் முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர்த்து படத்தில் ஒரு சில கதாபாத்திரங்கள் தெளிவில்லாமல் இருந்தது கதையின் நகர்வுக்கு பலவீனமாக அமைந்து விடுகிறது. முதல் பாதியில் இருந்த திரைக்கதையின் கச்சிதம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறது தான்.. ஆனால் மாடர்ன் டைம்ஸில் ஒரு நல்ல கிளாசிக் லவ் ஸ்டோரி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்!