Varisu Review: அன்பு பாதி... ஆக்ஷன் மீதி... விஜய்க்கு கைகொடுத்ததா வாரிசு... முதல் எக்ஸ்பிரஸ் விமர்சனம் இங்கே..!
Varisu Movie Review in Tamil: நடிகர் விஜய் நடிப்பில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள வாரிசு படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
Vamshi Paidipally
vijay, Rashmika Mandanna, Sarathkumar, jeyasudha, srikanth, prakashraj, prabhu, shaam
Varisu Review: இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் சரத்குமார்,பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஷாம்,ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் இணைந்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கேரக்டர்கள் முக்கியம்
வாரிசு படத்தின் கதைக்கு செல்வதற்கு முன்பு நாம் யார் யாருக்கு என்னென்ன கேரக்டர் என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சரத்குமார் - ஜெயசுதா தம்பதியினருக்கு ஸ்ரீகாந்த்,ஷாம்,விஜய் என மூன்று மகன்கள். ஸ்ரீகாந்தின் மனைவியாக சங்கீதா, ஷாமின் மனைவியாக சம்யுக்தாவும் வருகின்றனர். சரத்குமாரின் தொழில் எதிரி பிரகாஷ் ராஜ், அவரின் மகனாக கணேஷ் வெங்கட்ராம் உள்ளனர். சங்கீதாவின் சகோதிரியாக ராஷ்மிகா மந்தனா வருகிறார். வேலைக்காரராக யோகிபாபுவும், குடும்ப டாக்டராக பிரபுவும் நடித்துள்ளார்கள்.
கதையின் கரு
குடும்பத்தையே பிசினஸ் மைண்டாக நினைக்கும் சரத்குமார் தன்னுடைய 3 மகன்களில் பிசினஸில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே தனது வாரிசாக வருவார் என அறிவிக்கிறார். ஆனால் தந்தையின் நிழலில் வாழ நினைக்காமல் சொந்த தொழில் தொடங்க நினைக்கும் கடைசி மகனான விஜய்க்கும் சரத்குமாருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் விஜய் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதற்கிடையில் தனக்கு கேன்சர் இருப்பதும், இன்னும் சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன் என்ற உண்மையும் சரத்குமாருக்கு தெரிய வருகிறது.
இதனால் மனைவிக்காக தனது அறுபதாம் கல்யாண வைபவ நிகழ்வை நடத்திப் பார்க்க ஆசைப்படுகிறார். இந்த நிகழ்வுக்காக 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஜய் வீட்டுக்கு திரும்புகிறார். அதேசமயம் மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த்திற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. இரண்டாவது மகன் ஷாம் தான் வாங்கிய கடனுக்காக தொழில் ரகசியத்தை எதிரியான கணேஷ் வெங்கட்ராமனிடம் சொல்கிறார். இதனால் பிசினஸில் சரத்குமார் பின்னடைவை சந்திக்கிறார்.
2 மகன்கள் செய்த தவறுகள் அறுபதாம் கல்யாண வைபவ நிகழ்வில் வெளிப்படுகிறது. இதனால் சரத்குமார் தனது மொத்த சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசாக விஜய்யை நியமிக்கிறார். இந்த முடிவால் ஸ்ரீகாந்த், ஷாம் மகன்களும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார்களா, சரத்குமாரை வெல்லத்துடிக்கும் பிரகாஷ்ராஜின் நிலை என்ன என்பதை அன்பு கலந்த ஆக்ஷனுடன் வாரிசு சொல்கிறது.
ஒன் மேன் ஆர்மியாக விஜய்
விஜய் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இவருக்கு வயதே ஆகாது என நினைக்கும் அளவுக்கு முதல் காட்சி தொடங்கி கடைசி காட்சி வரை ஒன் மேன் ஆர்மியாக படத்தை தாங்குகிறார். குடும்ப பாசம்,காதல், ஆக்ஷன் நடனம் என அனைத்து ஏரியாவிலும் தான் கில்லி என்பதை மீண்டும் விஜய் நிரூபித்துள்ளார். அதேசமயம் படத்தின் நீளம் அதிகம் என்பதாலும், முதல் பாதியில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் இருப்பதாலும் சில இடங்களில் ஆடியன்ஸுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிய அளவில் படத்தில் கேரக்டர் இல்லை என்றாலும், ரஞ்சிதமே பாடலில் விஜய்க்கு ஈடாக அவர் ஆடிய நடனம் அப்ளாஸ் பெறுகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் தில் ராஜு சொன்னது போல இந்த படத்தில் பாட்டு, டான்ஸ், சண்டை, காமெடி, எமோஷன் என எல்லாமே இருக்கு. ஆனா பல இடங்களில் அது காட்சியோடு ஒட்டாமல் இருக்கிறது.
குடும்ப கதை என்பதால் அனைத்து உறவுகளுக்கும் இடையேயான அன்பை படம் நெடுக தூவி செல்கின்றனர். விஜய் -யோகி பாபு இடையேயான டைமிங் காமெடிகள் நல்ல ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதேபோல் சில நிமிடங்களே வந்தாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டைப் பெறுகிறது. படத்தில் ஆங்காங்கே விஜய், தனது முந்தைய படங்களின் காட்சிகளை ரெபரன்ஸ் வைத்துள்ளது ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ்.
பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் குறித்து சொல்லவே வேண்டாம். ஆனால் இந்த படத்தில் சற்று அடக்கியே வாசித்துள்ளார். மேலும் எளிதாக யூகிக்கக்கூடிய காட்சி அமைப்புகள் படத்துக்கு பின்னடைவாக அமைகிறது.
பின்னணி இசையில் பின்னிய தமன்
பாடல்கள் தொடங்கி பின்னணி இசை வரை தமன் தன் உழைப்பை கொட்டியிருக்கிறார். ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு எந்த மாதிரியான பின்னணி இருக்க வேண்டும் என்பதில் கவர்கிறார். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி அழகாக இருக்கிறது.
ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
முதல் பாதியில் ஆராரிராரோ பாடலை தவிர மற்ற இரண்டு பாடல்களும் தேவையில்லாத ரகம். இரண்டாம் பாதியில் வரும் தீ தளபதி, ரஞ்சிதமே பாடல் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பது நிச்சயம். குறிப்பாக ரஞ்சிதமே பாடலில் கடைசி ஒன்றரை நிமிடம் தியேட்டரே அதிரும் அளவுக்கு விஜய் நடனமாடியுள்ளார். ரஞ்சிதமே பாடலுக்கு கூட மொச்ச கொட்ட பல்லழகி பாடலை reference வைத்து படக்குழுவினர் விமர்சனம் செய்தவர்களுக்கு நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்.