(Source: ECI/ABP News/ABP Majha)
Kuiko Movie Review: காட்சிக்கு காட்சி சிரிப்பலை.. யோகிபாபுவின் ’குய்கோ’ பட விமர்சனம் இதோ..!
Kuiko Movie Review in Tamil: யோகிபாபு, விதார்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் “குய்கோ” படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
T ARUL CHEZHIAN
VIDARTH, YOGI BABU, PRIYANKA, DHURGA
Kuiko Movie Review in Tamil: யோகிபாபு, விதார்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் “குய்கோ” படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
குடியிருந்த கோயில் என்ற குய்கோ
குடியிருந்த கோயில் என்ற வார்த்தையின் சுருக்கமே குய்கோ என இப்படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விதார்த், யோகி பாபு, இளவரசு, முத்துக்குமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை டி.அருள்செழியன் இயக்கி உள்ளார். ஆந்தோணி தாசன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை
உள்ளூரில் மாடு மேய்க்கும் மலையப்பனும், முத்துமாரியும் காதலிக்கிறார்கள். ஆனால் வேலையை காரணம் காட்டி முத்துமாரியின் அண்ணன் பெண் கொடுக்க மறுக்கிறார். இதனால் துபாய்க்கு செல்லும் மலையப்பன் அங்கு ஒட்டகம் மேய்த்து பணம் சம்பாதித்து செல்வ செழிப்பாக இருக்கிறார். இதனிடையே ஊரில் இருக்கும் மலையப்பனின் தாய் மரணம் அடைய அந்நிகழ்வில் பங்கு பெறுவதற்காக துபாயிலிருந்து வருகை தருகிறார். இதனிடையே துக்க வீட்டில் வேலை நிமித்தமாக விதார்த் வரும் நிலை ஏற்படுகிறது. வந்த இடத்தில் யோகி பாபு என்னென்ன விஷயங்களை செய்தார் என்பதை மிகவும் நகைச்சுவை கலந்து எதார்த்தமாக தெரிவித்துள்ளார் இயக்குனர் அருள் செழியன்.
நடிப்பு எப்படி?
குய்கோ படத்தில் நடித்த அனைவருமே அவரவர் கேரக்டரின் முக்கியத்துவம் உணர்ந்து நடித்துள்ளார்கள் என்றே சொல்லலாம். மலையப்பனாக வரும் யோகி பாபு ஒன் மேன் ஆர்மியாக கதையை நகர்த்தி செல்கிறார். துபாயில் வேலை பார்ப்பவர் என கெத்து காட்டுவது, இறந்த தன் தாயை நினைத்து உருகுவது, காதலில் மருகுவது என பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார். அதேபோல் விதார்த்தத்துக்கு இந்த படத்தில் சிறிய கேரக்டர் என்றாலும் அதனை வழக்கம் போல் சரியாக செய்துள்ளார். இவர்களை தவிர்த்து இளவரசு, வெட்டுக்கிளியாக வரும் நபர், பிரியங்கா, துர்கா, வினோதினி ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார்கள்.
காட்சிக்கு காட்சி சிரிப்பலை
குய்கோ படம் 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே எடுக்கப்பட்டுள்ளது. இதில் இடைவேளை காட்சியில் தான் யோகி பாபுவே அறிமுகம் ஆகிறார். இதனால் முதல் பாதி முழுவதும் யதார்த்தமாக நகரும் காட்சிகள், இரண்டாம் பாதியில் காட்சிக்கு காட்சி சிரிப்பலையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறந்தவர்களை வீர மரணம் என குறிப்பிடுவது, அட்டாக் பாண்டி கேரக்டர், போகிற போக்கில் அரசியல் பேசுவது, ஊடகம் மற்றும் காவல் துறையை விமர்சிப்பது என பல விஷயங்களை அடுத்தடுத்து அழகாக நறுக்கென்று வசனம் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
தியேட்டருக்கு செல்லலாமா?
குய்கோ படத்தை தாராளமாக தியேட்டரில் சென்று காணலாம். அந்த அளவுக்கு அறிமுக இயக்குனர் டி.அருள் செழியனின் திரைக்கதை பாராட்டைப் பெறுகிறது. மேலும் அந்தோணி தாசன் இசையில் கிழவி கட்டும், அடி பெண்ணே ஆகிய பாடல்கள் காட்சிகளாகவும் ரசிக்க வைக்கிறது. மேலும் ராஜேஷ் யாதவ்வின் கேமரா கிராமத்து அழகை மேலும் மெருகூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஹீரோவுக்கான கதை என்றில்லாமல், கதை தான் ஹீரோ என்கிற பாணியில் நடிகர் யோகி பாபுவின் கதைத்தேர்வு இப்படத்திலும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.