Deiva Machan Review: இறப்பை முன்கூட்டியே அறியும் ஹீரோ.. தங்கை கணவரின் உயிரை காப்பாற்றுவாரா? - தெய்வ மச்சான் பட விமர்சனம் இதோ..!
Deiva Machan Movie Review:நடிகர் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள தெய்வ மச்சான் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
Martin Nirmal Kumar
Vimal, Anitha Sampath, Pandiarajan
புதுமுக இயக்குநர் மார்டின் நிர்மல் குமாரின் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தெய்வ மச்சான். தெய்வ மச்சான் திரைப்படமும் குலசாமி திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவதால் இரு படங்களின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. தெய்வ மச்சான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விமல்? வாங்க விமர்சனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கதையின் கரு:
யார் சாகப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறியும் ஹீரோ தங்கையின் தாலிக்கும் ஆபத்து இருப்பதை தெரிந்து கொள்கிறார்.. அடுத்து நடந்தது என்ன? இதுவே தெய்வ மச்சானின் திரைக்கதை.
தங்கை குங்குமத்தேனை (அனிதா சம்பத்) எப்படியாவது திருமணம் செய்து கரை சேர்த்து விட வேண்டும் என்று போராடும் அண்ணன் கார்த்தி (விமல்). இவரது கனவில் வரும் சாட்டைக்காரன், யார் இறக்க போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்கிறான். அதன்படி உயிரிழப்புகளும் நேர்கின்றன. இது ஒரு புறம் இருக்க, தங்கைக்கு நல்ல வரன் அமைகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு கார்த்தியின் கனவில் வரும் சாட்டைக்காரன் "உன் தங்கச்சி புருஷன் கல்யாணமாகி இரண்டு நாளைக்குள் இறந்து விடுவான்" என்று கூறுகிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியுறும் ஹீரோ அடுத்து என்ன செய்கிறார் என்பதை கிராமத்து வாடை வீசும் காமெடி பாணியில் விவரிக்கிறது மீதி கதை.

காமெடியை தவிர வேறொன்றுமில்லை!
தெய்வ மச்சான் படத்தின் இயக்குநர் நிர்மலிற்கு இன்னும் கொஞ்சம் சினிமா அனுபவம் தேவை என்பது, நன்றாக தெரிகிறது. தேவையற்ற காட்சிகளால் ஆரம்பத்திலேயே படம் கொஞ்சம் சோர்வடைய செய்கின்றது. சில இடங்களில் ஒர்க்-அவுட் ஆகாத காமெடி கவுண்டர்கள், பல இடங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதனால், கதையில் உள்ள குறைகள் கடைசியில் ரசிகர்களின் கவனத்தில் படமால் தப்பித்து விடுகின்றது. சாட்டைக்காரன் கனவில் வரும் காட்சிகள், கொஞ்சம் திகிலூட்டும் வகையில்தான் உள்ளது. அவற்றை இன்னும் கொஞ்சம் நீளமாக வைத்திருக்கலாம்.
ஏமாற்றிய நட்சத்திரங்கள்:
இந்த படத்தில் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், தீபா, விமல், வேல ராமமூர்த்தி தவிர வேறு யாரும் தேர்ந்த நடிகர்கள் என கூறும் அளவிற்கு யாரும் இல்லை. அனைத்தும் புது முகங்கள். செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் முகம் காட்டிய அனிதா சம்பத்திற்கு முதல் முறையாக பெரிய ரோல் கொடுத்துள்ளனர். அதை அவர் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். விமல் உட்பட பல நடிகர்கள், கேமரா முன் தயங்கி தயங்கி நடிப்பது போல தோன்றுகிறது. இப்படி பலரின் சொதப்பலான நடிப்பால், மனதில் நிற்க வேண்டிய காட்சிகளும் நழுவி ஓடுகின்றன.

குடும்பமாக சென்று பார்க்கலாமா?
களவாணி, தேசிங்கு ராஜா போன்ற கிராமத்து பின்னணி கதையை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் விமல், இந்த படத்திலும் அதையே செய்திருக்கிறார். விமலிடம் வித்தியாசமான நடிப்பை எதிர்பார்க்க முடியாது, ஆனால் இந்த கதையில் கொஞ்சம் வித்தியாசத்தை எதிர்பார்க்கலாம். மொத்தத்தில், பொறுமை அதிகம் என்றால், இந்த படத்தை தாராளமாக திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம்





















