Deadpool & Wolverine Review: அட என்னப்பா இப்படி பண்றாங்க! டெட்பூல் & வோல்வரின் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Deadpool & Wolverine Review in Tamil: மார்வெல் திரையுலகை சேர்ந்த டெட்பூல் & வோல்வரின் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு விரிவாக அறியலாம்.
Shawn Levy
ரியான் ரெனால்ட்ஸ், ஹூஜ் ஜாக்மென்
Theatre
Deadpool & Wolverine Review: டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
டெட்பூல் & வோல்வரின் திரைப்படம்:
மார்வெல் காமிக்ஸை அடிப்படையாக கொண்ட ஹூஜ் ஜாக்மென் நடிக்கும், வோல்வரின் உலக அளவில் ஒரு லெஜண்டரி கதாபாத்திரமாக கருதப்படுகிறது. இதனிடையே, ரியான் ரெனால்ட்ஸ் நடிக்கும், டெட்பூல் கதாபாத்திரம் தனது எதார்த்தமான வடிவமைப்பால் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகால நீண்ட முயற்சிகளுக்கு பிறகு, அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இணைந்து நடித்துள்ள டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் உருவாகியுள்ளது.
விமர்சன ரீதீயாக தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் மார்வெல் நிறுவனத்திற்கு, மல்டிவெர்ஸ் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம், ரசிகர்களை திருப்திபடுத்தியதா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
டெட்பூல் & வோல்வரின் கதை என்ன?
டெட்பூல் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாகவே, டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் வந்துள்ளது. லோகி சீரிஸில் வந்த டைம் வேரியண்ட் அதாரிட்டியை (TVA) சேர்ந்த, பாரடாக்ஸ் எனும் நபர் ஒட்டுமொத்த TVA அமைப்பையும் கைப்பற்ற நினைக்கிறார். அதேநேரம், டெட்பூல் உலகத்தைச் சேர்ந்த வோல்வரின் கதாபாத்திரம் (Anchor Being) இறந்ததால், அந்த ஒட்டுமொத்த உலகமும் அழிய இருக்கிறது. இதனை அறிந்த பாரடாக்ஸ், டெட்பூலின் தேவையை கருதி அவரை காப்பாற்றி, வேறு உலகிற்கு அனுப்ப முயல்கிறார். அப்போது, தனது உலகம் அழியவிருப்பதை அறிந்த டெட்பூல், எப்படி பாரடாக்ஸிடம் இருந்து தப்பிச் சென்று தனது உலகை காப்பாற்றினார் என்பது தான் மீதிக்கதை.
சொன்னபடி மார்வெலை காப்பாற்றியதா டெட்பூல் & வோல்வரின்?
அண்மைக்காலமாக மார்வெல் திரைப்படங்கள் விமர்சன ரீதீயாக தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் இந்த ஆண்டில் வெளியான ஒரே மார்வெல் திரைப்படமான, டெட்பூல் & வோல்வரின் திரைப்படத்தின் டிரெய்லரிலேயே தான் ஒட்டுமொத்த மார்வெலையே காப்பாற்றப்போகும் கடவுள் என டெட்பூல் பேசி இருப்பார். படத்தை பார்த்த பிறகு, அவர் சொன்ன வார்த்தையை 100 சதவிகிதம் செயல்படுத்தி இருக்கிறார் என்றே சொல்ல தோன்றுகிறது.
டெட்பூல் கதாபத்திரத்திற்கு உரிய நகைச்சுவைகள், சண்டைக்காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி உள்ளன. மறுபுறம் அவருக்கு சற்றும் சளைக்காமல், வோல்வரின் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது ஆக்ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளன. டெட்பூல் உடனான நகைச்சுவை கலந்துரையாடல்களும் எதிர்பார்த்த வெற்றியை தந்துள்ளன. படம் முழுவதும் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பயணிக்க, ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் ஆகிய இருவரும் மொத்த படத்தையும் தோள்களில் சுமந்துள்ளனர். படம் முடியும் போது, ”வாவ்” என்ற எண்ணம் நிச்சயம் உங்களுக்கு தோன்றும். படத்தின் ஒரு வசனத்தை தவறவிட்டாலும், நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவையை தவறவிட்டிருப்பீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஆச்சரியப்படுத்தும் அம்சங்கள்:
படத்தின் ஆரம்ப காட்சிகளே, ஒட்டுமொத்தமாக என்ன மாதிரியான படத்தை பார்க்க போகிறோம் என்பதை நமக்கு உணர்த்திவிடுகிறது. காட்சிக்கு காட்சி ரசிகர்கள் நகைச்சுவையை அனுபவித்து படத்தை கொண்டாட முடிகிறது. ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் ஆகியோர் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஆங்காங்கே இடம்பெற்றுள்ள கேமியோக்கள் நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றாலே உலகை காப்பாற்றுவது மட்டுமே கதை. மார்வெலும் அதைதான் செய்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே திரைக்கதையில் தொடர்ந்து கோட்டை விட்டு வந்த நிலையில், டெட்பூல் & வோல்வரின் படத்தில் அது கனகச்சிதமாக அமைந்துள்ளது. லோகன் கதாபாத்திரத்தை சரியாக வடிவமைத்து, ஏற்றுக்கொள்ளும்படியாக மீண்டும் அழைத்து வந்திருப்பது ரசிகர்களை திருப்தி அடைய செய்துள்ளது. வசனங்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பக்க பலமாக அமைந்துள்ளன. குறிப்பாக டெட்பூலின் எண்ட்ரி சீனில் வரும் பாடல் தியேட்டரை அலறவிடுகிறது.
டெட்பூல் & வோல்வரின் குறை என்ன?
படத்தில் ஆங்காங்கே கிராபிக்ஸ் காட்சிகள் துண்டாக தெரிகிறது. ஆனால் அதையும், பட்ஜெட் பிரச்னையா? என கேட்டு டெட்பூலே கலாய்த்து மறக்கடிக்கச் செய்கிறார். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், சட்டென முடிந்தது போன்று தோன்றியது. வில்லி கதாபாத்திரமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வழக்கமாக வந்து அடிவாங்கி செல்லும் வில்லியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், ஆக்ஷன் மற்றும் காமெடி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ள, டெட்பூல் & வோல்வரின் மார்வெலிற்காக இந்த முறை வசூல் வேட்டையை நிகழ்த்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பின்குறிப்பு: நீங்கள் மார்வெல் மற்றும் எக்ஸ்-மேன் படங்களை ஆரம்பம் முதலே பார்த்து வருபவராக இருந்தால், டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் உங்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும். குறிப்பாக இதில் வரும் கேமியோக்கள் உங்களை மெய்மற்றக்கச் செய்யலாம். நிச்சயம் திரையரங்குகளில் பார்க்க தவறாதீர்கள்.