Avatar 2 Review: 13 ஆண்டு காத்திருப்பு; எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா அவதார்-2?.. - நேர்த்தியான நறுக் விமர்சனம்!
Avatar 2 Review in Tamil: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ரசிகர்களை 13 ஆண்டுகளாக காக்க வைத்த அவதார்-2 படத்தின் முழு விமர்சனம் இங்கே!
![Avatar 2 Review Tamil James Cameron Avatar The Way of Water Hollywood Movie Review Rating James Cameron Sam Worthington Kate Winslet Avatar 2 Review: 13 ஆண்டு காத்திருப்பு; எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா அவதார்-2?.. - நேர்த்தியான நறுக் விமர்சனம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/16/64fbebed00bd742b8ca456c700c0a9591671163225680501_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
James Cameron
Sam Worthington, Sigourney Weaver, Zoe Saldana, Kate Winslet, Stephen Lang
2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் தொடர்ச்சியாக, அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைபடம் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் 13 ஆண்டு திரை தாகத்தை தணிக்கும் வகையில் இருந்ததா அவதார்-2? வாங்க பார்ப்போம்.
கதையின் கரு:
பாண்டோரா கிரகத்தின் காடுகளில் ஒமாட்டிகாயா எனப்படும் நாவி இன மக்களுக்கும், தனது குடும்பத்திற்கும் தலைவனாக வாழ்ந்து வருகிறான் ஜேக் சல்லி. ஒமாட்டிகாயா மக்களுக்கும் பாண்டோராவை ஆக்கிரமிக்க வந்த மனிதர்களுக்கும் இடையேயான போர் நடந்து ஆண்டுகள் பல உருண்டோடுவதாக் கூறி நகர்கிறது திரைக்கதை. முதல் பாதியில் இராணுவத் தலைவனாகவும் படத்தின் வில்லனாக வந்த குவாட்ரிச் இதில் முழுக்க முழுக்க அவதாராகவே வருகிறார்.
முதல் பாகத்தில் பாண்டோராவை ஆக்கிரமிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட வில்லன் குவாட்ரிச், இந்த பாகத்தில் தனது இறப்பிற்கு காரணமாக இருந்த ஜேக் சல்லியையும் அவரது குடும்பத்தையும் கொல்ல முயற்சி செய்கிறார். இதைத் தெரிந்து கொள்ளும் ஜேக், தனது குடும்பத்தினருடன் மெட்கைனா எனப்படும் மக்கள் வாழும் கடல் பகுதிகளுக்கு சென்று தஞ்சமடைகிறான். அங்கேயும் அவர்களை துரத்தும் குவாட்ரிட்ச், ஜேக்கை அழிப்பதற்காக படையை உருவாக்குகிறான். இறுதியில் ஜேக்கும் அவனது குடும்பத்தினரும் தப்பித்தனரா? மெட்கைனா இன மக்களுக்கும்-மனிதர்களுக்குமான போரில் வென்றது யார்? போன்ற கேள்விகளுக்கு பதில்கள் மீதிக்கதையாக விரிகிறது.
கிராஃபிக்ஸ் விருந்து:
வில்லன்களை துவம்சம் செய்து போர் புரியும் ஜேக் சல்லி கதையின் ஹீரோ என்றால், படம் வெற்றிப் பெற்றதற்கு முக்கியமான ஹீரோவாக விளங்குவது அவதாரின் கிராஃபிக்ஸ் காட்சிகள்தான். ஹாலிவுட் படங்களுக்கும், ஹாலிவுட் சீரிஸ் படங்களுக்கும் நமது ஊரில் ரசிகர்களுக்கு பஞ்சமே இல்லை. அவர்களின் கண்களுக்கு படத்தின் கிராஃபிக்ஸ் விருந்தாக அமைந்திருக்கிறது.
அவதாராக மனிதர்களே நடித்திருந்தாலும், அது ஒரு இடத்தில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் மெனக்கெட்டு ஒவ்வொரு சீனிலும் பிக்ஸல் பிக்ஸலாக செதுக்கி இருக்கிறார்கள் அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் கலைஞர்கள். பாண்டோராவின் ஒரு முகத்தை மட்டுமே முதல் பாகத்தில் காண்பித்த ஜேமஸ் கேமரூன், இந்த பாகத்தில் பிற முகங்களையும் காண்பித்துள்ளார்.
புதுப்புது மிருகங்கள், புது இன நாவி மக்கள் என நிறைய இந்த பாகத்தில் நிறைய புதுமைகளை புகுத்திய விதத்தில் சபாஷ் ஜேம்ஸ் என்றே சொல்லத்தோன்றுகிறது. கடலில் துப்பாக்கியுடன் மனிதர்களும், அம்பு-வேல் கொம்புடன் நாவி மக்களும் சண்டையிடும் காட்சிகளின் கிராஃபிக்ஸ் ரசிகர்களை வாயை பிளந்து கொண்டு பார்க்க வைக்கிறது.
நீ……ண்ட திரைக்கதை:
படத்தின் முதல் பத்து நிமிடங்கள் “என்னடா இது..” என ரசிகர்களை கொட்டாவி விட வைத்த திரைக்கதை மெல்ல மெல்ல வேகமெடுக்கத் தொடங்குகிறது. முதல் பாகத்தில் ஜேக் சல்லியை வீரம் மிக்க இராணுவ அதிகாரியாகவும் , பின்பு ஹைப்ரிட் அவதாராகவும் காண்பித்த ஜேம்ஸ் கேமரூன், இந்த பாகத்தில் அன்புள்ள அப்பாவாகவும், தனது குடும்பத்திற்காக பயப்படும் சாதாரண மனிதராகவும் காண்பித்துள்ளார்.
ஒமாட்டிகாயா இன மக்களின் வீரப் பெண்மணி நைட்ரி(நாயகி) என்றால், கடல் பகுதியில் வாழும் நாவி மக்களின் வீரமிகு தலைவியாக விளங்குகிறார், ரோனல். நிறை மாத கர்பமாக இருக்கும் இவர், கடைசியில் தனது கணவருடன் சேர்ந்து போருக்கு போகும் காட்சி, ரசிகர்களை ‘அடடா’ சொல்ல வைக்கிறது. கிராஃபிக்ஸ் காட்சிகளும், புதுப்புது அவதார்களும் என்னதான் ரசிகர்களை ரசிக்க வைத்தாலும், படம் மிக நீளம் என்பது மறுக்க முடியாத உண்மை. முதல் பாகத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்த மருத்துவர் க்ரேஸின் சொல்லப்படாத கதை இந்த பாகத்திலும் சொல்லப்படாமலேயே செல்கின்றது. வில்லனாக ஸ்டீஃபன் லேங் மிரட்டியிள்ளார். குட்டி அவதார்கள், ரசிகர்களை குஷிப்படுத்துகின்றன.
10-20 நிமிட க்ளைமேக்ஸ் காட்சிகளை மட்டுமே பார்த்து பழகிய நம்ம ஊர் ஆட்களால், அவதார் படத்தின் முக்கால் மணி நேர க்ளைமேக்ஸை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “முதல் பாகம் அளவுக்கு இல்லப்பா..” என இறுதியில் ரசிகர்கள் ‘உச்’ கொட்டிக்கொண்டே கூறுவது இந்த படத்தை விரும்பி பார்த்தவர்களுக்கு வேதனையளிக்கும் வகையில் உள்ளது. மொத்தத்தில், எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் போனால், ஏமாற்றாமல் திருப்பி அனுப்புகிறது, அவதார தி வே ஆஃப் வாட்டர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)