World Photography Day: எங்களுக்கும் ‛போட்டோ’ வரும்... ‛இது ஏபிபி நாடு செய்தியாளர்கள் ‛க்ளிக்’ !
இன்று உலக போட்டோ தினம். முன்பு கேமரா வைத்திருப்பவர்கள் தான் போட்டோகிராபர்கள். இன்று...மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் போட்டோகிராபர். எங்கள் செய்தியாளர்கள் எடுத்த போட்டோக்கள் இதோ
ஒவ்வொரு போட்டோவுக்கும் ஒரு பார்வை உண்டு. அது எடுப்பவருக்கும், பார்ப்பவருக்குமானது. யார் எந்த கோணத்தில் அதை எடுத்தார்கள் என்பது அவர்களுக்க மட்டுமே புரிந்த ரகசியம். அப்படி ஏபிபி நாடு செய்தியாளர்கள் எடுத்த போட்டோக்கள் தான் இவை. இவற்றில் சிலவற்றை நீங்கள் செய்தியில் பார்த்திருக்கலாம். சிலவை பார்க்காமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ இது ஏபிபி ஸ்பெஷல் க்ளிக்ஸ்!
பாம்பன்..... ஃபோட்டோ பார்த்தவுடன் கண்டுபிடிக்க கூடிய அளவு பரிச்சயமான இடமாக இருந்தாலும்... முதல் முறை பாம்பனை நான் நேரில் பார்த்தபோது எடுத்தது ... இரயிலில் சென்று கொண்டிருந்தபோது, பாம்பனை கடக்கும்போது, இரயில் ஸ்லோ ஆனபோது எடுத்தது... நான் எடுத்த ஃபேவரைட் புகைப்படங்களில் ஒன்று
-கார்த்திகா ராஜேந்திரன், ஏபிபி நாடு, சென்னை
கொரோனாவில் மாற்றுத்திறனாளி தந்தையை இழந்து 13 வயதில் காய்கறி விற்க வந்த பள்ளி மாணவன் யஷ்வந்தின் ஏக்கத்தை அப்படியே பதிவு செய்த திருப்தி. இந்த படம் அவருக்கு தீர்வும் தந்தது.இடம் : வேலூர் பலவன்சாத்துக்குப்பம்.
-கார்ல் மார்க்ஸ், ஏபிபி நாடு, ராணிப்பேட்டை.
'அந்தி மந்தாரை' பூவைப் போல் மாலை நேர வெயில் சத்திய மங்கலம் வனப்பகுதிக்குள் உள்ள கிராமத்தில் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்தது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் எடுத்த புகைப்படம் -
-அருண் சின்னதுரை, ஏபிபி நாடு, மதுரை.
கரூர் தளவாபாளையம் அருகே நடைபெற்ற பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு. உணர்ச்சிப்பூர்வமான பதிவு
-பிரபாகரன், ஏபிபி நாடு, கரூர்.
திருச்சூர் பூரம் விழாவுக்கு வருகை தந்திருந்த யானை. வெயில் பொறுக்காமல் மர நிழலில் ஒதுங்கியிருந்தது. இலைகளைத் தாண்டி சூரியனின் ஒளிக்கதிர் யானை முகத்தில் விழுந்து அதன் கண்களை ஊடுருவிச் சென்றது. எடுக்கப்பட்ட வருடம் 2018. பி.கு. யானையின் கண்களை நேரடியாகப் பார்த்தால் அவற்றுக்குப் கோபம் வருமாம் பாகன்கள் பிறகு சொன்னார்கள்.
-ஐஸ்வர்யா சுதா, ஏபிபி நாடு, சென்னை.
மாமல்லபுரம்... பலரின் கேமராவில் அடைபட்ட பகுதி தான். இதில் பெரிய ஆச்சரியம் இல்லாமல் இருக்கலாம். முதன்முறையாக பார்த்த எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. கடற்கரை கோயிலின் ஒட்டுமொத்த முகப்பையும் எடுக்க எடுத்த முயற்சி. கூடவே மேகங்களும் நுழைந்துவிட்டன.
-பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், ஏபிபி நாடு, சென்னை.
குழந்தைகள் கையில் விளையாட வேண்டிய பலூர், விற்பனைக்கு வரும் போது தான் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களாக மாறுகின்றனர். மாமல்லபுரத்தில் இந்த காட்சிகள் அதிகம் காணலாம்.
-கிஷோர், ஏபிபி நாடு, காஞ்சிபுரம்
தன் கலைக்காக ஆடி ஓய்ந்த கால்கள் சோர்வின்றி மீண்டும் ஆடும் எதிருள்ளோரின் கரவொலியால்..
-பிரசாந்த், ஏபிபி நாடு, கடலூர்.
ஒளிக்கீற்றுகள் தடைகளை தாண்டும் என்பார்கள்... இருளை தாண்டும் என்பேன் நான்...
-சரவணன், ஏபிபி நாடு, நெல்லை.
ஆட்களின்றி ஆரவரமின்றி வெறிச்சோடினாலும் எப்போதும் வெளிச்சம் காணும் தேசத்தந்தை தான் புதுச்சேரி கடற்கரையின் அடையாளம். இடம்: காந்தி சதுக்கம்
-சிவரஞ்சித், ஏபிபி நாடு, புதுச்சேரி.
மவுண்ட் ரோட்டில் நின்றால் மலை தெரியுமா தெரியாது.... அதே மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி., கட்டடம் மேலே நின்றால் மலை தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமா...!
-கதிரவன், ஏபிபி நாடு, சென்னை.