World Elephant Day 2023: செல்லக்குட்டியை பிடிக்காதவங்க யாரு? உலக யானைகள் தினம் இன்னைக்கு..
உலக யானைகள் தின நிகழ்வுகளில், உலகெங்கிலும் மில்லியன் கணக்கானோர் பங்கேற்கின்றனர்.
யானைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக யானைகள் தினம்
உலக யானைகள் தினம் என்பது யானைகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். இந்த நாள் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் யானைகள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்த ஒரு தளமாக செயல்படுகிறது. பொதுவான பிரச்சினைகளாகிய, வசிப்பிட இழப்பு, தந்தங்களுக்காக வேட்டையாடப்படுதல், மனிதனுக்கும் யானைக்குமான மோதல்கள், பாதுகாப்பு முயற்சிகளின் தேவை ஆகியவை இதில் அடங்கும்.
எதிர்கால சந்ததியினருக்காக இந்த அற்புதமான உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தவும், அவற்றின் நலன் மற்றும் வாழ்வுக்கு பங்களிக்கும் செயல்களை ஊக்குவிக்கவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.
உலக யானைகள் தினம் 2023 எப்போது?
சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பராமரிப்பதில் யானைகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதற்காக செயல்படும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்த நாள் உதவுகிறது. இந்த உலக யானைகள் தினம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி எல்லா ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
உலக யானை தின வரலாறு
ஆகஸ்ட் 12, 2012 அன்று, கனடாவை சேர்ந்த பட்ரிசியா சிம்ஸ் மற்றும் தாய்லாந்தின் எச்.எம் ராணி சிரிகிட்டின் முன் முயற்சியில், தாய்லாந்தின் யானை மறுமலர்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து உலக யானை தினம் நிறுவப்பட்டது. அதன் பின் எல்லா ஆண்டும் உலக யானைகள் தினத்தை பாட்ரிசியா சிம்ஸ் தொடர்ந்து நடத்தி வருகிறார். அதன் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை, உலகளவில் 100 யானை பாதுகாப்பு அமைப்புகள் இதில் கூட்டு சேர்ந்துள்ளன. அதோடு இந்த தினம் உலகம் முழுவதும் எண்ணற்ற மக்களை சென்றடைந்துள்ளது. உலக யானைகள் தின நிகழ்வுகளில், உலகெங்கிலும் மில்லியன்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இது மக்கள் யானைகள் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதையும், அவற்றைக் காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் நமக்கு காட்டுகிறது.
உலக யானை தினத்தின் முக்கியத்துவம்
உலக யானைகள் தினம் என்பது குழுக்களும் தனிநபர்களும் ஒன்றிணைந்து யானைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கான ஒரு தளமாகும்.அனைத்து அமைப்புகளும் தனிநபர்களும் உலக யானை தினத்தின் கீழ் பிரச்சாரங்களை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும் தேசிய எல்லைகள் மற்றும் அரசியல் பிளவுகளுக்கு அப்பால் ஒத்துழைக்க வேண்டிய இந்த முக்கியமான உலகளாவிய பிரச்சனையை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உதவவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த உலகளாவிய குரல் தனிநபர்கள், அரசியல்வாதிகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு அவற்றின் பாதுகாப்பு தீர்வுகளை உருவாக்குவதற்கும் ஆதரவளிப்பதற்கும் வழி வகுக்கிறது. இது யானைகள் மற்றும் விலங்குகளுக்கு உலகை பாதுகாப்பான இடமாக மாற்றவும் உதவுகிறது.