Diet | சோஷியல் மீடியாவில் சொல்லும் டயட் ஃபாலோ பண்றீங்களா? இதை முதல்ல படிங்க..
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், இன்னும் பல சோஷியல் மீடியா தளங்களை ஓபன் செய்தால் போதும் ஃப்ரீ அட்வைஸ் அருவியாக வந்து கொட்டும்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், இன்னும் பல சோஷியல் மீடியா தளங்களை ஓபன் செய்தால் போதும் ஃப்ரீ அட்வைஸ் அருவியாக வந்து கொட்டும். உங்களுக்கு சர்க்கரை வியாதியா இந்த டயட் ஃபாலோ பண்ணுங்க, பிசிஓடியை ஒழிக்க இந்த உணவு, கொழுப்பைக் கரைக்க இது, எடையைக் கூட்ட, குறைக்க என்ற ஆயிரமாயிரம் உணவுமுறை அதான்
டயட் பரிந்துரை. பேலியோ டயட், வேகன் டயட் என்று விதவிதமான பெயர்களும் உள்ளன. ஆனால் உண்மையில் இப்படியாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் டயட் முறைகளை மருத்துவரின் முறையான ஆலோசனை இல்லாமல் பின்பற்றினால் நிச்சயம் ஆபத்து எனக் கூறுகின்றனர் டயட்டீசியன்கள்.
ஒரே ஒரு பிரத்யேக டயட், அது எல்லோருக்கும் பொருந்தக்கூடியது என்று எதுவுமில்லை என்கின்றனர் டயட்டீசியன்கள். இந்திய ஊட்டச்சத்து சமூகத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரான டாக்டர் ஜானகி ஸ்ரீநாத் கூறியதாவது: ஒருங்கிணைக்கப்பட்ட டயட் திட்டத்துக்கும், பொதுவான டயட்டுக்கும் இடையே துல்லியமான வித்தியாசம் இருக்கின்றது. உதாரணத்துக்கு ஒரு நபருக்கு எடை குறைப்புக்காக டயட் தயாரிக்கும்போது, அந்த நபருக்கான கலோரி கணக்கிடப்படுகிறது. அவருடைய உடலின் வாகு, தேவை பொருத்தே அவருக்கு உணவுமுறை திட்டமிடப்படுகிறது. அவருக்கான பொதுவான ஊட்டச்சத்துகளில் ஒரு தேர்ந்த டயட்டீசியன் எப்போதும் கைவைக்கமாட்டார். மாறாக சரிவிகித உணவை அவருடைய உடல்நிலைக்கு ஏற்ப வடிவமைப்பார். அப்படிக் குறையும் எடை தான் ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதே போல், இந்திய மருத்துவக் கழகத்தின் வாரங்கல் பிரிவு தலைவர் டாக்டர் பி.சுதிர் கூறுகையில், "பொதுவாக ஒரு கீட்டோ டயட் முறையை சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் உகந்தது என்று கூறி பரிந்துரைத்த ஊட்டச்சத்து நிபுணர் வீரமாச்சினேனி மீது நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். காரணம் இந்த பொதுவான டயட் அபாயகரமானது. கீட்டோ டயட் என்பது அதிமான கொழுப்பு, குறைவான கார்போஹைட்ரேட்ஸ் கொண்டது. கார்போ உட்கொள்ளும் விகிதத்தைக் கடுமையாகக் குறைத்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கீட்டோசிஸ் என்ற வளர்சிதை மாற்றக் குறைபாட்டை உருவாக்கும். ஒரு குறிப்பிட்ட உடல் நலக்குறைவை சரி செய்ய என பொதுவாக உணவு முறை இல்லை. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறையே கூட அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப மாறும்" என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் தாக்கம்:
மக்கள் சமூக வலைதளங்களில் பரவும் டயட் பிளான்களுக்கு ஏன் அடிமையாகிறார்கள் என்பது குறித்து டாக்டர் ஜானகி ஸ்ரீநாத் கூறுகையில், "சில சமூக வலைதள பிரபலங்களுக்கு ஆயிரங்களிலும் லட்சங்களிலும் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். அவர்கள் கூறும் எல்லாம் ட்ரெண்டாகிவிடுகிறது. கண்மூடித்தனமான பியர் பிரஷரைப் போல் சோசியல் மீடியா பிரஷருக்கு மக்கள் ஆளாகின்றனர். அதனாலேயே இதுபோன்ற வலைகளில் சிக்கிக் கொண்டு தீவிர உடல் உபாதைகளுக்கு ஆளாகி தவிக்கின்றனர்" என்றார்.
ஹைதராபாத் ஏஐஜி மருத்துவமனையின் மூத்த ஊட்டச்சத்து நிபுணர் ஏ உஷா ஸ்ரீ கூறும்போது, சிலர் பொதுவான டயட் வழிகாட்டுதலைப் பின்பற்றி உப்பே இல்லாமல் சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடும்போது சோடியம் அளவு கவலைக்கிடமாகி அந்த நபர் ஐசியுவில் அனுமதிக்கப்படும் அளவுக்குச் சென்றுவிடுவார் என்றார்.
ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் தலைமை டயட்டீசியன் டாக்டர் சுனிதா பிரேமலதா, புரத டயட்டை கண் மூடித்தனமாக பின்பற்றக் கூடாது. சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களின் நிலையை அது இன்னமும் மோசமாக்கும். மேலும் செப்சிஸ் போன்ற பாதிப்பை அது உருவாக்கும். சிலர் உடல் எடையைக் குறைக்க சிறு தானியம் சாப்பிடுகின்றனர். ஆனால், அதை அதிகமாக உண்ணும் போது கேஸ்ட்ரிக் தொந்தரவுகள் வந்துவிடுகின்றன. டயட் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொருத்து உருவாக்கப்பட வேண்டும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )