Walking Benefits: ரொம்பதூரம் வேண்டாம்.. ஒரு நாளில் இவ்வளவு தூரம் மட்டும் நடந்தால் போதும் - புதிய ஆய்வு சொல்லும் சேதி..
தினசரி 2,337 ஸ்டெப்ஸ் நடந்தால் இதய நோய் சம்மதமான எந்த பிரச்சனையும் ஏற்படாது என புதிய ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் நாம் இந்த நவீன உலகில் பம்பரமாய் சுழன்று வருகிறோம். அலுவலக வேலை முடிந்தால் வீடு இல்லையெனில் வெளியே சென்று குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் நேரம் கழிப்பது, இதுவே இன்றைய வாழ்க்கை முறையாக பெரும்பாலானோருக்கு மாறிவிட்டது. ஆனால் நம்மில் எத்தனை பேர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்? பலருக்கு நேரமே இல்லாத சூழ்நிலை உள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வின் படி, ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச 2,337 அடிகள் (steps) நடந்தால் இதய நோய் சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடப்பது நல்லது:
ஒரு நாளைக்கு சுமார் 6,000 முதல் 10,000 ஸ்டெப்ஸ் நடத்தால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு புதிய ஆய்வு, ஒரு நாளைக்கு 4,000 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் உபாதைகள் காரணமாக இறக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்றும், அதே நேரத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 2,337 ஸ்டெபஸ் நடப்பது இருதய நோயால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் எவ்வளவு அதிகமாக நடக்கிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மக்கள் தினசரி நடக்க விரும்பும் ஸ்டெப்ஸின் எண்ணிக்கையைப் பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தனர். இதற்காக, இருதயவியல் பேராசிரியர் மசீஜ் பனாச் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், பல நாடுகளில் உள்ள 2,26,889 பேரை உள்ளடக்கிய 17 முந்தைய ஆய்வுகளின் தரவுகளை சேகரித்தனர், அவர்கள் தினசரி நடக்கும் ஸ்டெப்ஸின் எண்ணிக்கை கணக்கிட்டு ஆரோக்கிய பாதிப்புகளை மதிப்பீடு செய்ய ஏழு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டனர்.
இதய ஆரோக்கியம்:
ஒரு நாளைக்கு குறைந்தது 3,967 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் உபாதைகளால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கத் தொடங்கியது என்று ஆய்வு பரிந்துரைத்தது. மறுபுறம், ஒரு நாளைக்கு 2,337 ஸ்டெப்ஸ் நடப்பது இருதய நோய்களால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கிறது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 1,000 ஸ்டெப்ஸ் வரை நடப்பது இறக்கும் அபாயத்தில் 15 சதவிகிதம் குறைக்க வழிவகுக்கும் என்றும், 500 ஸ்டெப்ஸ் தினசரி அதிகரிப்பது இருதய நோயால் இறப்பதில் 7 சதவிகிதம் குறைக்க வழைவகுக்கும் என்றும் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 5,000 ஸ்டெப்ஸுக்கு கீழே நடக்கும் நபர்களை sedentary lifestyle பிரிவின் கீழ் வகுத்துள்ளனர்.
உடல் ஆரோக்கியம்:
இதைப்பற்றி பேராசிரியர் மசீஜ் பனாச் கூறுகையில், "நீங்கள் எவ்வளவு அதிகமாக நடக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்தது என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. வயது வித்தியாசம் இல்லாமல், இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம், உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது பொருந்தும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள் நோயில்லாமல் வாழலாம் என குறிப்பிட்டுள்ளார். தினசரி 7,000 முதல் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கும் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அதேபோல், 60 வயது மேற்பட்டோருக்கு தினசரி 6,000 முதல் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பவர்கள் மத்தியில் நல்ல முன்னேற்றம் இருந்ததாக கூறப்படுகிறது.
பயன்தரும் நடைபயிற்சி:
நடைபயிற்சி உடற்தகுதி, இதய ஆரோக்கியம், மனச்சோர்வு மற்றும் சோர்வைப் போக்குதல், மனநிலையை மேம்படுத்துதல், மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை உருவாக்குதல் மற்றும் வலியைக் குறைத்தல், எடை அதிகரிப்பதைத் தடுப்பது, புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் பிற நாட்பட்ட நோய்கள் உள்ளிட்ட பல நன்மைகளைக் கொண்டுள்ளது. ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள், நடைப்பயிற்சியின் நன்மைகள் குறித்து ஆராய்ந்து, ஒரு நாளைக்கு சுமார் ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடப்பவர்களுக்கு, எடையை அதிகரிக்கும் மரபணுக்களின் விளைவுகள் பாதியாகக் குறைந்துவிட்டதாக கண்டுபிடித்துள்ளனர்.
மூட்டுவலி உள்ளவர்களுக்கு நடைபயிற்சி நன்மை பயக்கும், ஏனெனில் பல ஆய்வுகள் நடைபயிற்சி கீல்வாதம் தொடர்பான வலியைக் குறைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஐந்து முதல் ஆறு மைல்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மூட்டுவலி (arthritis) ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது, குறிப்பாக கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பு, போதிய உடல் உழைப்பு இல்லாதது ஆண்டுக்கு 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. நடைபயிற்சியால் சளி, காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.