Unhealthy Food Combination :வாழைப்பழத்தை இந்த பொருட்களுடன் நிச்சயம் சேர்த்து சாப்பிடாதீர்கள்.. உடல்நல பிரச்சனை ஏற்படுமாம்...
வாழைப்பழத்தை எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது குறித்துப் பார்க்கலாம்.
வாழைப்பழம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பழம். நீங்கள் அதை ஒரு பழமாகவும், பச்சையாக இருக்கும்போது காய்கறியாகவும் சமைத்து சாப்பிடலாம். வாழைப்பழத்தில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தில் நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கான பல அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. இருந்தாலும் கூட வாழைப்பழத்தை சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல்நல கேடுகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.
வாழைப்பழத்தை எந்தெந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது குறித்துப் பார்க்கலாம்.
1. பாலுடன் வாழைப்பழம்:
ஆயுர்வேதத்தின் படி, வாழைப்பழம் இயற்கையில் அமிலமாகும். அதே நேரத்தில் பால் இனிப்பு சுவையுடையது. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாகச் சாப்பிடும்போது, அமா என்ற நச்சுப் பொருளை உருவாக்குகிறது. இது சமநிலையின்மை மற்றும் நோய்களுக்கு மூல காரணமாகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் சளி, இருமல் மற்றும் பிற தொடர்புடைய உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
2. இறைச்சியுடன் வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் ப்யூரின் உள்ளது, இது செரிமானத்தை எளிதாக்குகிறது. அதேசமயம், சிவப்பு இறைச்சியில் உள்ள அதிக புரதச் சத்து செரிமான செயல்முறையை மந்தப்படுத்துகிறது. மாறுபட்ட இயல்புடைய இந்த இரண்டு உணவுகளையும் மீண்டும் மீண்டும் சாப்பிடும்போது, அவை செரிமான மண்டலத்தில் நொதித்தல் மற்றும் வாயுவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.
3. வேகவைத்த பொருட்களுடன் வாழைப்பழம்:
சிலர் காலை உணவாக வாழைப்பழம் மற்றும் ரொட்டியை சேர்த்து சாப்பிடுகின்றனர். ரொட்டி மற்றும் வேகவைத்த பொருட்களில் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். அதேசமயம், வாழைப்பழம், முன்பு குறிப்பிட்டது போல, செரிமானத்தை ஊக்குவிக்கிறது. ஆனால், மாறுபட்ட தன்மை கொண்ட இந்த இரண்டு உணவுகளும் ஒன்றாகச் சேர்ந்தால், அவை செரிமான சமநிலையின் அபாயத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு தொடர்புடைய உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும்.
4. சிட்ரஸ் பழங்களுடன் வாழைப்பழம்:
வாழைப்பழத்துடன் எலுமிச்சை, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி போன்ற அமில மற்றும் சப்-அசிட் பழங்களைத் தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழைப்பழங்கள் மற்றும் அமிலப் பழங்களை ஒன்றாகச் சாப்பிடும்போது குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் என சொல்லப்படுகிறது.