Tomato Pickle: விலை உயர்வால் தக்காளி தொக்கை மிஸ் பண்றீங்களா..? இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க... ஒரு மாதம் பயன்படுத்தலாம்
சூடான சாதம், தேசை, இட்லியுடன் வைத்து சாப்பிட சுவையான தக்காளி ஊறுகாய் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
சமூக வலைதளத்தை திறந்தாலே தக்காளி பற்றிய மீம்களை தான் காண முடிகின்றது. தக்காளியின் விலை உயர்வு தான் இதற்கு காரணம். விலை உயர்வு காரணமாக ஏராளமான இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் எப்படி சமைப்பது? என யூடியூப்கள் தேடித்தேடி சமைக்கின்றனர்.
ஆனாலும் தக்காளி இல்லாமல் இந்திய உணவுகளை குறிப்பாக தென்னிந்திய உணவுகளை சமைப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். தக்காளியை சமையலில் பயன்படுத்தும் போது அது சமையலின் சுவையை அதிகரிக்க உதவும். அதன் புளிப்பு சுவை அபாரமானதாக இருக்கும்.
சுவையான தக்காளி ஊறுகாய்:
இப்படி தக்காளி விலை உயரும் நேரங்களில் தக்காளியின் சுவையை சுவைக்க முடியாமல் மிஸ் பன்றிங்களா? இனி அந்த கவலை வேண்டாம். கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ 200 வரை விற்ற தக்காளி இப்போது கிலோ 60 ரூபாயாக குறைந்து உள்ளது. மார்க்கெட்டில் மலிவான விலையில் தக்காளி கிடைக்கும் போது அவற்றை வாங்கி தக்காளி ஊறுகாய் செய்து வைத்துக்கொண்டால், தக்காளி விலை உயரும் போது அதை சுவைக்கலாம்.
ஊறுகாய் என்றதும் நீங்கள் ஏதோ எலுமிச்சை, பூண்டு ஊறுகாய்களை போன்று நினைத்துக்கொள்ள வேண்டாம். தக்காளி ஊறுகாயை நீங்கள் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, தோசை, இட்லி ஆகியவற்றிற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சுவை அசல் தக்காளி தொக்கு போன்று ஸ்பைசியாக இருக்கும். இதை ஒரு முறை ட்ரை பன்னி பாருங்க. நிச்சயம் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த தக்காளி 2 கிலோ
தனி மிளகாய்த்தூள்- காரத்திற்கேற்ப
உப்பு- சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் -150 கிராம்
புளி எலுமிச்சை அளவு
கடுகு சிறிது
பெருங்காயம் 1 டீஸ்பூன்
செய்முறை
தக்காளி ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். தக்காளி தோல் தென்பட கூடாது. கூடவே புளியையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் அகலமான அடிகனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்கவிட்டு, மிதமான தீயில் வைத்து,அடனுடன் அரைத்த தக்காளியை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி பெருங்காயம், தனி மிளகாய்த்தூள, கல் உப்பு சேர்த்து வேகவிடவும்.
தக்காளியின் சாறு முழுவதும் வற்றி கெட்டிப்பதம் வரவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். சாறு இறுகும் போது ருசி பார்த்து உப்பு, காரம் தேவையெனில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றாக கெட்டி பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆறவிட்டு காற்றுபுகாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை கெடாது. வெளியில் வைத்தால் ஒரு வாரம் வரை தாங்கும்.
(தக்காளி சாறை பாத்திரத்தில் கொதிக்க வைத்தும் சாறு இறுகி கெட்டிப்பதத்துக்கு வந்தபிறகு வாணலியில் தாளித்து சேர்த்து நன்றாக கிளறி இறக்கலாம். புளி தேவையெனில் சேர்க்கலாம். புளி நீண்ட நாள் ஊறுகாயை கெடாமல் வைக்கும்.)