(Source: ECI/ABP News/ABP Majha)
உங்க மனசுக்கு பிடிச்சவங்களோட உறவை புதுப்பிக்க என்ன முயற்சி எடுத்தீங்க?
உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் நாள் நேற்று.இன்றைய தினத்தில் நீங்கள் உங்கள் நெருக்கமானவர்கள் உடனான உறவுகளை புதுப்பித்துக் கொள்ள சில வழிகள்.
இன்று உறவுகளை புதுப்பிக்கும் நாள். சில நேரங்களில் நாம் நமக்கு மிக அருகில் இருப்பவர்களின் அன்பை அங்கீகரிக்கத் தவறவிட்டு விடுகிறோம். அது நம் நண்பராக,காதலியாக, பெற்றோர்களாக, நமது ஆசிரியர்களாக, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.சில நல்ல நட்புகள் காரணமின்றி ஏற்பட்ட சின்ன சண்டைகளால் முறிந்திருக்கலாம். இந்த நாளை முன்னிட்டு உங்கள் வாழ்வில் நீங்கள் அதிகம் மதிக்கும் உறவை சில எளிய முயற்சிகளால் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
நீண்டநாள் தொடர்பில் இல்லாத நண்பர்கள்
நம் அனைவருக்கும் பள்ளியில், கல்லூரியில் நண்பர்களோடு ஒன்றாக சுற்றிக்கொண்டு திரிந்த காலம் நிச்சய இருந்திருக்கும்.ஆனால் படிப்பின் காரணத்தினாலோ,வேலையைக் காரணமாக கொண்டோ நாம் அவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வருகிறோம்.என்றாவது ஒரு நாள் அவர்களை பற்றிய நினைப்பு வரும் ஆனால் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் பிஸியாக இருக்கும் நாம் அதற்கு மேல் அவர்களைப் கடந்து நமது வேலைகளுக்கு திரும்பி விடுகிறோம். இன்றைய நாளை ஒரு வாய்ப்பாகக் கொண்டு அத்தகைய ஒரு நபருக்கு தொலைபேசியிலோ அல்லது ஒரு சிறு குறுஞ்செய்தியோ அனுப்புங்கள்.அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஏதாவது ஒரு விடுமுறை நாளில் சந்திக்கலாம் என்று கேளுங்கள்.
காதலியோ மனைவியோ
நீங்கள் காதலிக்கும் நபராகவோ அல்லது நீங்கள் திருமணம் செய்துகொண்டவராக இருக்கட்டும். அவர்கள் உங்களுடன் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்பவர்கள் அவர்கள் உங்களுடன் இருப்பதாலேயே நீங்கள் அவர்களைப் பற்றி எதுவும் புகழ்ந்தோ பாராட்டியோ பேசக் கூடாது என்றில்லை அல்லவா…. உங்கள் காதலியிடமோ மனைவியிடமோ இன்று நீங்கள் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுத் தெரியப்படுத்துங்கள். அவர்களை உங்கள் வாழ்வில் பெற்றிருப்பதை நினைத்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள் என தெரியப்படுத்துங்கள்.
வழக்கமாக அவர்களின் பிறந்தநாளுக்காக மட்டுமே வாங்கித் தரும் பரிசுகளைப்போல் ஒரு சின்னப் பரிசை அவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள்.இந்த உறவில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கு ஏதாவது இடர்கள் இருக்கின்றனவா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்
பெற்றோர்கள்
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நமக்காக தங்களது வாழ்க்கையை அர்பனிப்பவர்கள் நமது பெற்றோர்கள். அவர்களுக்கு நாம் திருப்பி அளிக்க வேண்டிய எந்த எதிர்பார்ப்பும் இன்றி உழைப்பவர்கள். இன்று பெரும்பாலும் அனைவரும் நாம் நம் வேலைகளுக்காக வெளியூர்களில் தங்கியிருக்கிறோம்.ஒரு நாளைக்கு நமது பெற்றோர்களிடம் நாம் அதிகபட்சம் பேசுவது 10 நிமிடத்திற்குள்ளாக தான் இருக்கிறது. இன்றைய நாளில் உங்கள் பெற்றோரிடம் வழக்கத்தை விட சற்று அதிக நேரம் உரையாடுங்கள். அவர்களது மனநிலை எப்படி இருக்கிறது. அவர்களுக்கு ஏதாவது மனக்குறை இருந்து வருகிறதா என்பதை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.