Onam 2022: ஓணம் வந்தல்லோ.. கேரளத்து புலிக்களி நடன வரலாறும் சிறப்பும்!
கேரளத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று தான் திருவோணம். கேரளத்து பாரம்பரியத்துடன் 10 நாட்கள் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
கேரளத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று தான் திருவோணம். கேரளத்து பாரம்பரியத்துடன் 10 நாட்கள் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
திருவோணம் என்றாலே நினைவுக்கு வருவது கேரளத்து பெண்கள் அணியும் அம்மாநிலத்திற்கே உரிய கசவு புடவை. அத்தப்பூ கோலம் மற்றும் ஓணம் சத்யா உணவு. இந்த பண்டிகையின் போது பெண்கள் வெள்ளை நிற கசவு புடவை அணிய ஆண்கள் வேஷ்டி சட்டையுடன் பராம்பரிய முறையில் கொண்டாடுவார்கள்.
ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, ஒவ்வொருவர் வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இத்திருநாளில் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் இடப்பட்டிருக்கும். இந்தாண்டு திருவோணம் செப்டம்பர் 8ஆம் தேதி வருகிறது.
ஓணத்துடன் பல சிறப்புகள் இருக்கின்றன. ஓணம் உணவு. ஓணம் புலிக்களி என நிறைய உள்ளன.
இவற்றில் நாம் ஓணம் புலிக்களியைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளலாம்.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் புலி வேசம் போட்டு நடனமாடுவது தான். அட நம்ம கமல் அண்ணாத்த ஆடுறேன் ஒத்துக்கோ என்று அபூர்வ சகோதரர்கள் பாடலில் ஆடுவாரே அதுதானே என்று கேட்கிறீர்களா. அதிலும் சற்று வித்தியாசமானது. புலி போன்ற உடையை அணியாமல். புலி உருவத்தை உடலில் வரைந்து கொண்டு ஆடுவார்கள்.
கடுவக்களி எனப்படும் புலிக்களி:
ஓணம் விழாவில் இடம் பெரும் புலி ஆட்டம் புலிக்களி என்று அழைக்கப்படுகிறது. இதனை கடுவக்களி என்று கேரள மக்கள் அழைக்கின்றனர். இந்த ஆட்டம் ஓணம் திருவிழாவின் நான்காம் ஓணம் எனப்படும் உத்ரோடும் நாளில் கொண்டாடப்படுகிறது. இசையின் ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலிவேடமிட்டு ஆடுவர்.
இதன் கரு, புலிவேட்டை தான். அதனால் சிலர் புலி போலவும், சிலர் வேடர்கள் போலவும் வேஷம்கட்டி ஆட்டம் போடுவார்கள். திரிச்சூர் ஆண்கள் தான் இதில் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள்.
களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர்கள்.
புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும்.
இந்த வேடத்தை போட்டுக் கொள்ள ஆயில் பெயிண்ட் பயன்படுத்துகிறார்கள். இதை அழிப்பது சிரமமாக இருந்தாலும் கூட பக்தர்கள் ஆண்டுதோறும் இதனைச் செய்கின்றனர்.
புலிக்களி ஆட்டம் ஆண்களால் மட்டுமே ஆடப்படுகிறது என்றாலும் கடந்த 2016 ஆம் ஆண்டு பெண்களும் இந்த வேடமிட்டு ஆடினார்கள்.