YouTube | இது ஒடிசாவின் குக்கிங் யூடியூப்.. தினக்கூலி வேலை டு யூட்யூபர்! ஐசக் முண்டாவின் கதை!
கடந்த ஓராண்டில், படிப்படியாக தனது யூட்யூப் சேனலை அப்டேட் செய்துள்ள ஐசக் முண்டா, முன்னர் செய்து வந்த தினக்கூலி வேலையை விட்டுவிட்டு இப்போது யூட்யூப் மூலம் முழு நேரம் சம்பாதித்து வருகிறார்.
ஒடிஷா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐசக் முண்டா. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஒரு வேளை உணவிற்கு கூட கஷ்டப்பட்டு வந்த ஐசக் முண்டா, தனது சோகமான நாட்களை கழிக்க யூட்யூபில் வீடியோ பார்க்க தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து வீடியோக்களை பார்த்து வந்தவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வீடியோக்கள் எடுக்க தொடங்கியுள்ளார். ’ஃபுட் ப்ளாகர்கள்’ வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்ட ஐசக், அவரும் தனக்கென ஒரு யூட்யூப் சேனலை தொடங்கி அதில் உணவு சார்ந்த வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார்.
அரிசியும், பருப்பும் சமைத்து அதை அவர் சாப்பிடும் வீடியோவை தனது சேனலில் பதிவேற்றினார். சட்டென வைரலான அந்த வீடியோ, இன்று வரை 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த வீடியோவை அப்லோட் செய்வதற்கு அவருக்கு முதலில் ஒரு ஸ்மார்ட் ஃபோன் தேவைப்பட்டது. அதற்காக 3,000 ரூபாய் கடன் வாங்கி ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியிருக்கிறார்.
தனது கிராமத்து மக்களை பற்றியும், அங்கு நிலவும் அசாதாரண சூழலை பற்றியும் பதிவு செய்யும் வகையில், தனது சேனலில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றார். சில மாதங்களிலேயே இந்த வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஹிட்டாக, இப்போது கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் அவரது சேனை சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.
உணவு சமைப்பது பற்றிய வீடியோவாக மட்டுமல்லாமல், உணவை பரிமாறுவது, தரையில் உட்கார்ந்து உண்பது போல மிக எதார்த்தமாக அவரது வாழ்க்கை சூழலை அவர் பதிவு செய்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் யூட்யூப் தரப்பில் இருந்து அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தி வீடு கட்டிய அவர், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, உதவிகளை நாடும் அவரது கிராம மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றார்.
கடந்த ஓராண்டில், படிப்படியாக தனது யூட்யூப் சேனலை அப்டேட் செய்துள்ள ஐசக் முண்டா, முன்னர் செய்து வந்த தினக்கூலி வேலையை விட்டுவிட்டு இப்போது யூட்யூப் மூலம் முழு நேரம் சம்பாதித்து வருகிறார். ஐசக் முண்டாவுக்கு, நெட்டிசன்கள் வாழ்த்துகளையும், அன்பையும் அள்ளி கொடுத்து வருகின்றனர்.
இதே போல, தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமத்து சமையல் யூடியூப் சேனலான Village Cooking சேனல், மிகவும் பிரபலமடைந்து இப்போது 1 கோடி சப்ஸ்க்ரைபர்களை எட்டியுள்ளது. இந்தக் குழுவில் 5 பேரும், 75 வயது முதியவரும் உள்ளனர். இளைஞர்களில் சுப்பிரமணி என்பவருக்கு இணையம் கைவந்த கலை. அவர் இணையம், கேமரா, எடிட்டிங் சப்போர்ட் செய்ய வயல்வெளியில், இயல்பாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் சுவையாக சமைக்கும் இவர்களின் சமையல் முறைக்கு கடல்கடந்தும் தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.
Mohamad suma of Telangana : 40 அடி கிணறு...நரியைக் காப்பாற்ற இறங்கிய நாயகி - என்ன நடந்தது?