Nethili Dry Fish Thokku : மணக்கும் நெத்திலி கருவாட்டு தொக்கு.. ஒரு வாரம் ஸ்டாக் வைக்கலாம்..
நெத்திலி கருவாடு தொக்கு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
200 கிராம் நெத்திலி கருவாட்டை 5 நிமிடம் சுடு தண்ணீரில் ஊறவைத்து நன்கு மூன்று முறை அலசி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு அடி கனமான கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். கருவாடு தொக்கிற்கு சிறிது எண்ணெய் அதிகமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். இதில் இரண்டு பட்டை, 5 லவங்கம், இரண்டு ஏலக்காய், அரை டீஸ்பூன் சோம்பு சேர்க்கவும்.
இதில் நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப் அளவு சேர்க்கவும். வெங்காயம் லேசான கோல்டன் நிறம் வரும் வரை வதக்கி விட வேண்டும். பின் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 5 குறுக்காய் கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போகும்வரை வதக்கி விட வேண்டும். பின் இதில் நறுக்கிய தக்காளியை சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை விட ஒரு தக்காளி அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அப்போது தான் தொக்கின் சுவை நன்றாக இருக்கும்.
தக்காளி நன்கு குழைய வதங்கியதும், தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மட்டன் மசாலா தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து கிளறி விடவும். இதன் பச்சை வாசம் போனதும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாடை இதில் சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேக விட்டு, பின் திறந்து சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு பதம் பார்த்துக் கொள்ளவும். கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் சற்று குறைவாக சேர்த்து விட்டு இறக்கும் போது ஒரு முறை சரி பார்த்து விட்டு சேர்த்துக்கொள்வது நல்லது. இல்லையென்றால் உப்பு அதிகமாகி விட வாய்ப்பு உள்ளது. இந்த தொக்கை 10 நிமிடம் மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவேண்டும். இடை இடையே மூடியை திறந்து கிளறி விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளலாம். இந்த கருவாடு தொக்கு சாதத்துடன் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பாதுகாத்து, பயன்படுத்திக்கொள்ளலாம்.