”தாய்மை என்பதோர்” - 1 | பூ முகம் பார்க்கும் முதல் தருணம்.. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்..
ஒருவாறு சமாளித்து இரண்டு நாட்கள் வலியோடு பாலூட்டினேன். பிறகு அந்த வலி மெல்ல மெல்லப் பழகிவிட்டதேயன்றி இனிதாகவெல்லாம் இல்லை
அடர்மேகப் பொதிகளுக்கு இடையிலிருந்து தலைநீட்டிப்பார்க்கும் நிலவொளிபோல் மெல்லியதுணிகள் உடல்முழுதும் சுற்றப்பட்டிருக்க, முகம்மட்டும் தெரியும்படி நமக்குக் காட்டப்படுகிற நம் குழந்தையை முதல்முறையாகக் கையிலேந்துகிற நம் குடும்பத்தின் மகிழ்ச்சியை சொற்களுக்குள் அடக்க முடியாது. அதே நேரத்தில் பிரசவித்த வலியெல்லாம் குழந்தையின் முகம்பார்த்ததும் அப்படியே மறந்துபோகும் என்பது யாரோ திரித்துவிட்ட கதையேயன்றி உண்மையில்லை.
பத்து மாதக் காத்திருப்பும் எதிர்பார்ப்பும் குழந்தையாகப் பார்க்கும்போது மகிழ்ச்சிதான் என்றாலும் அந்த மகிழ்ச்சியின் சதவீதத்தை பேறுகால உளச்சிக்கல்களோடு ஒப்பிட்டால் மகிழ்ச்சியின் அளவு குறைவென்பது புரியும். சுற்றியிருக்கிற எல்லாரும் மகிழ்ந்திருக்க, தான் மட்டும் அந்தச் சூழலோடு உடனே பொருந்திப்போக முடியாமல் பிரசவித்த பெண்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறோம். தாயான உணர்வு மகிழ்ச்சியைத் தருமென்பது எத்தனை உண்மையோ அதேயளவு உண்மை, கருவிலிருந்து வெளிவந்த குழந்தையைக் கையிலேந்திய பிறகு ஏற்படும் மனதளவிலான விலகலே.
•அயர்ச்சியும் மகிழ்ச்சியும்
பிரசவித்த அயர்ச்சி, ஹார்மோன் மாறுபாடுகள், அறுவைசிகிச்சையின் ரணம், உதிரப்போக்கு என எல்லாமும் சேர்ந்து "அப்பாடா"வெனத் தூங்கினால் போதுமென்றிருந்தது எனக்கு. இத்தனை அசதிக்கு மத்தியில் இரண்டுமணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்குப் பாலூட்டச் சொல்லும்போது இனம்புரியாக் கோபமும் உடல் இசையாமையால் அழுகையுமே பீறிட்டது. ஒருவாறு சமாளித்து இரண்டு நாட்கள் வலியோடு பாலூட்டினேன். பிறகு அந்த வலி மெல்ல மெல்லப் பழகிவிட்டதேயன்றி இனிதாகவெல்லாம் இல்லை.
•முதல் பாலூட்டல்
குழந்தை பிறந்த முதல் ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் புகட்ட வேண்டுமென்கிறது யுனிசெஃப் நிறுவனம். இதனை பேறுகாலத்தில் உடனிருக்கும் உறவினர்கள் உறுதிசெய்ய வேண்டும். தாய் மயக்கம் தெளிந்த உடனேயே குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். குழந்தையைக் கொஞ்சுகிற ஆர்வத்தில் தாய்ப்பால் புகட்டுவதில் தாமதமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தையின் முதல் ஒருமணிநேரம் தாயுடன் இருப்பதற்கானது. தாயின் உடலோடு அணைத்தபடி குழந்தையைப் படுக்கவைப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை தரும்.
’நான் இப்படியான அம்மாவாகத்தான் இருக்க விரும்புகிறேன்’ - சன்னி லியோனின் ‘மதர்ஸ் டே’ ஷேரிங்..
•எதிர்மறைச் சொற்கள் வேண்டாமே!
முதல் பாலூட்டலின் வலியை உடனிருப்போர் உணர்ந்து பிரசவித்த பெண்ணுக்கு ஆதரவாகப் பேசுவது அவசியமானது. உடனிருப்போர் சொல்கிற நேர்மறையான சொற்களே பிரசவித்த பெண்ணை பயத்திலிருந்தும் வலியிலிருந்தும் மீட்டெடுக்கும். " பாலே இல்ல", "பால் பத்தல" போன்ற பாராமீட்டர் வேலைகளையெல்லாம் செய்யாமல் இருப்பது நலம். "தன்னால் குழந்தைக்குப் போதுமான அளவு பாலைக் கொடுக்கமுடியாதுபோல" என நினைக்கத் தொடங்கிவிட்டால் சிரமமாகிவிடும்.
பவுடர் பால் வேண்டாமே!
மருத்துவர்கள் பரிந்துரைத்தாலன்றி நீங்களாக எதையும் பரிசோதனை செய்யாதீர்கள். பவுடர் பால் குழந்தைக்கு அசீரணத்தை ஏற்படுத்தும். தாயிடம் பால் சுரக்கிறவரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப் பாருங்கள்.
டயாபருக்கு நோ! பிறந்த குழந்தையின் சருமம் மிக மிக மென்மையானது. அதனால் குறைந்தது ஒருமாதத்திற்காவது டயாபர் இல்லாமல் துணிகளைப் பயன்படுத்துங்கள். சிறிதளவு ஈரமானாலும் துணியை உடனே மாற்றிவிடுங்கள்.
குழந்தை எத்தனைமுறை சிறுநீர் போகிறது; எவ்வளவு அளவில் போகிறது; ஈரமாகும்போது அழுகிறதா என்பதையெல்லாம் கண்காணிக்க துணிகளே உதவும். தவிர்க்க முடியாத நேரங்களில் இரவில் மட்டும் டிஸ்போஸ் செய்கிற டயாபர் பயன்படுத்துங்கள். ஒருமாத கவனிப்புக்கால் பிறகு இரவு நேரங்களில் டிஸ்போ டயாபர் பயன்படுத்தலாம். உறக்கம் இனிதாகட்டும்.
- பேசுவோம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்