Is wearing cloth mask effective | துணி மாஸ்க்குகள் கொரோனாவை தடுக்குமா? என்ன சொல்கிறது WHO?
துணி மாஸ்க்குகள் பாக்டீரியா மற்றும் மாசுக்களில் இருந்து மட்டுமே பாதுகாக்கும் தன்மையுடயது அதுவும் வெறும் 50 சதவிகிதம் மட்டுமே
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கி உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை இரண்டாம் அலையின் தாக்கம் உச்சம் பெற்றிருக்கிறது. எனவே மக்கள் இரண்டு மாஸ்க்குகள் அணிவதை அரசு ஊக்குவிக்கிறது. உட்பகுதியில் துணி மாஸ்க்கும், வெளிப்புறத்தில் என்95 அல்லது சர்ஜிக்கல் மாஸ்க்கை அணியவும் அரசு வலியுறுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க நாளுக்கு நாள் சந்தையில் வண்ண வண்ண டிசைன்களில் துணி மாஸ்க்குகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. மக்கள் பலரும் பொது இடங்களில் துணி மாஸ்க்குகளுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. உண்மையில் இந்த மாஸ்க்குகள் கொரோனா போன்ற வைரஸிடம் இருந்து பாதுகாக்குமா ? என்றால் வல்லுநர்கள் தரும் பதில் "இல்லை" என்பதுதான்.
ஆம் துணி மாஸ்க்குகள் பாக்டீரியா மற்றும் மாசுக்களில் இருந்து மட்டுமே பாதுகாக்கும் தன்மையுடயது அதுவும் வெறும் 50 சதவிகிதம் மட்டுமே, கொரோனா மட்டுமல்ல வேறு எந்தவகை வைரசில் இருந்தும் துணி மாஸ்க்குகள் நமக்கு பாதுகாப்பினை வழங்காது என்று கூறப்படுகிறது.
எந்த வகை துணி மாஸ்க்கினை அணியலாம்?
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள உலக சுகாதார மையம் 3 அடுக்குகள் கொண்ட துணி மாஸ்குகளை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. அதில் முதல் அடுக்கானது காட்டனால் செய்யப்பட்டிருக்க வேண்டும், இந்த அடுக்கு நம் மூக்கு மற்றும் வாயோடு தொடர்பில் இருக்கும். அடுத்த அடுக்கானது பாலிப்ரொப்பிலீன் துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மூன்றாவது அடுக்கான வெளிப்புற அடுக்கு பாலிஸ்டரில் செய்யப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் இவை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் சோப்பு கொண்டு அலசவேண்டும்.
மற்ற மாஸ்க்குகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்
N95: இது வைரசிடம் இருந்து 95% பாதுகாப்பு அளிக்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது, பாக்டீரியா, மாசு மற்றும் தூசியில் இருந்து 100% பாதுகாப்பினை வழங்கும்.
சர்ஜிக்கள் மாஸ்க்:
இது மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் மாஸ்க் . வைரஸிடம் இருந்து இவ்வகை மாஸ்க்குகள் 95% பாதுகாப்பினை வழங்குகின்றன. தூசி, மாசு மற்றும் பாக்டீரியாவில் இருந்து 80% பாதுகாப்பினை வழங்கும்
கார்பன் மாஸ்க் :
கார்பன் ஆக்டிவேட் செய்யப்பட்ட இவ்வகை மாஸ்க்குகள் வைரஸிடம் இருந்து வெறும் 10 சதவீத பாதுகாப்பினை மட்டுமே வழங்குகின்றன. பாக்டீரியா உள்ளிட்டவைகளில் இருந்தும் 50 சதவீத பாதுகாப்பு மட்டுமே வழங்க கூடியவை
FFP1 மாஸ்க் :
இது வைரஸிடம் இருந்து 95% பாதுகாப்பினை வழங்கக்கூடியவை ,பாக்டீரியா மற்றும் மாசுக்களில் இருந்து 80 சதவீத பாதுகாப்பு கிடைக்கும்
பஞ்சு மாஸ்க் : இது வைரஸில் இருந்து எவ்வித பாதுகாப்பினையும் வழங்காது. மேலும் பாக்டீரியா மற்றும் மாசுக்களில் இருந்து 0.5% பாதுகாப்பினை வழங்குகிறது.
எனவே முறையான மாஸ்க்குகளை அணிவதுதான் கொரோனா போன்ற பெரும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும், எனவே மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களின் அறிவுறுத்தலாக உள்ளது