Veld Grape Or Pirandai : பிரண்டை துவையல்.. உப்பு.. பிடிக்குமா? பிரண்டை சாப்பிட்டா இவ்வளவு மருத்துவ குணங்களா?
நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள பழகிக்கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும், இரைப்பை அழற்சி, அஜீரணம் சரியாகும்.
![Veld Grape Or Pirandai : பிரண்டை துவையல்.. உப்பு.. பிடிக்குமா? பிரண்டை சாப்பிட்டா இவ்வளவு மருத்துவ குணங்களா? How to make chutney dried salt in veld grape? How and what are the medicinal properties Veld Grape Or Pirandai : பிரண்டை துவையல்.. உப்பு.. பிடிக்குமா? பிரண்டை சாப்பிட்டா இவ்வளவு மருத்துவ குணங்களா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/12e3ca21523fe3f443da33d66e1d442e_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரண்டை மூலிகை வேலி ஓரங்களில் கொடி போல் படர்ந்து வளரும் தன்மையுடையது. மேலும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பிரண்டயை நமது முன்னேர்கள் துவையலாக சாப்பிடுவது வழக்கம். கொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வதை தடுக்கிறது. இதனால் இதய வால்வுகளும் பாதிப்படைகின்றன. ஆனால் பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும், எலும்பு பலப்படும். இந்த பிரண்டை, நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவும், வாடாத பசுமையான கீரையாக சந்தைகளிலும் கிடைக்கிறது.
ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தவும், வாயு பிடிப்பை போக்கவும் பிரண்டை உதவுகிறது. ஒவ்வாமைக்கும் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. பிரண்டையில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன. இது இரத்த மூலம், வயிற்றுவலி ஜீரணகோளாறுகளை சரி செய்கிறது. மேலும் ஒழுங்காக மாதவிடாய் வராத கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது இந்த பிரண்டை. இதன் வேர் கூட எலும்பு முறிவில் கட்டுப்போட உதவும். பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக்கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்;
ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும். இரைப்பை அழற்சி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமானம் பிரச்சினைகளுக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது. மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.
துவையல்
பிரண்டைத் தண்டுகளின் தோலையும் நாரையும் அகற்றி, சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்து தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
இலைத் துவையல்
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகு - 5, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்தால் துவையல் தயார்.
வற்றல்
நன்கு முற்றிய இதன் தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக மாற்றவேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
பிரண்டை உப்பு
பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும். பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும். 2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னைகள் தீரும். ஆண்மை வீரியம் பெருகும்; உடல் வலிமை பெறும். வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)