Kanni Sippiparai Dogs: ’கூர்முகம் உடைய கன்னி, சிப்பிப்பாறை நாய்கள்’ இன வழி கண்டறிதல்..!
நல்ல சங்குக்கட்டு – பொடித்தல – முழித்தெறிப்பு – ரோமசன்னம் – வால் சுத்தம் – சவ்வு போடாத வயிறு – கூனுக்கால் – நெஞ்சடி” எனச் சில அளவுகோல்கள் இருந்தாலுமே சில நுட்பமான வேறுபாடுகளுடன் கூடிய ரசனையும் உண்டு !
வேட்டைத்துணைவன் 19
கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் பகுதி – 11
கூர்முகம் உடைய கன்னி / சிப்பிப்பாறை நாய்கள்ப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சட்டென்று இடையில் முழுதாக மூன்று கட்டுரைகளை பருவெட்டு மண்டை நாய்களுக்கு ஒதுக்கியதற்கு காரணம் இவை ரெண்டும் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு பெயரைத் தாங்கி நிக்கிறது என்பது மாத்திரம் அல்ல ! கூர்முக கன்னி / சிப்பிப்பாறை நாய்களின் உடல் கூறுகள் குறித்து பேசும் போது நாம் கணக்கில் கொள்ள வேண்டிய சில சங்கதிகளை மேற்படி நாய்கள் தன்னிடத்தில் கொண்டுள்ளது என்பதால் தான்.
அவற்றை அலசுவதற்கு முன்னதாக இனவழி குறித்து நாம் பார்த்த கட்டுரையை ( வேட்டைத்துணைவன் -13) மீண்டும் ஒரு முறை நீங்கள் நினைவு படுத்திக்கொள்ள வேண்டுகிறேன். ஒரு இனவழி உருவாகிறது ( அல்லது உருவாக்கப் படுகிறது) அந்த இனவழி சில தனித்துவத்தைக் தன்னிடத்தில் கொண்டுள்ளது. அந்தத் தனித்துவமானது களத்தில் வெளிப்படும் திறன் என்பதைத் தாண்டி சில உடல் கூறுகளை அடக்கியது. அந்தக் கூறுகளுக்குள் நிலவும் மாறுபாடுகள் தான் இந்த வழி நாய் “இப்படி” இருக்கும் இந்த வழி நாய் “அப்படி” இருக்கும் என்று நம்மை அணுக வைக்கிறது.
சரி இவை மாறுபடக் காரணம் என்ன? என்றால், துவக்கத்தில் அவர்களுக்குக் கிடைத்த நாய்கள், அவர்களைக் கவர்ந்த நாய்கள், அவர்களின் குருநாதர்கள் சொன்ன தேர்வு முறைகள் என எல்லாமும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது.
கீகாட்டில் ( தோராயமாக கோவில்பட்டியில் இருந்து ஒரு கரிசல் வட்டம் வரையலாம்) இந்த வேட்டை நாய்களில் புழக்கம் உள்ளவர்கள் மத்தியில் ஒரு வசனம் பிரபலம். ஒரு முறை என் குருநாதர் ஒரு பருவட்டு நாயை காண்பித்து,“ நல்ல வழியான நாய். அந்த நாய்ல பொட்ட குட்டி அவளோ தெளிவா இறங்குது. ஆனா மண்ட காணாது. பருந்தலயாப் போச்சு” என்றார். கூர்முக கன்னி நாய்தான். ஆனால் தலை கொஞ்சம் கணம். சில பிறவி அப்படி. அவர் சொல்லி முடிக்கும் போது, “சரி ஒடம்புக்கு தக்கன மண்ட” என்ற அந்த வசனத்தைச் சொன்னேன். அதாவது நாய் நல்ல எலும்புத்தாக்கு ! ரெட்டப் பூட்டு பின்ன அதற்கு ஏத்தாற்போல தலையும் கொஞ்சம் பெருசாக இருக்கும் அல்லவா. வெளியே பேசிக் கேட்டது அன்று சொல்லி விட்டேன்.
“எப்பா நீயென்ன கீகாட்டுக் காரங்க மாரி சொல்ற ! நாய் ரெட்டப் பூட்டா இருந்தாலும் தலச்சீர் தப்பி வரலாமா” என்றார். அவரைப் பொறுத்தவரை இது சமரசம். அது தேவை அற்றது. “நல்ல சங்குக்கட்டு – பொடித்தல – முழித்தெறிப்பு – ரோமசன்னம் – வால் சுத்தம் – சவ்வு போடாத வயிறு – கூனுக்கால் – நெஞ்சடி” எனச் சில அளவுகோல்கள் இருந்தாலுமே சில நுட்பமான வேறுபாடுகளுடன் கூடிய ரசனையும், மதிப்பீடும் இனவழி பிரியர்களுக்கும் – குருநாதர்களுக்கும் உண்டு !
“ வெறப்பா இரும்புபோல பருவெட்டா நாய் இருக்கனும்னு அவசியமே இல்லப்பா, நாய் நைசா வில்லு போல இருக்கனும். ஒத்தப் பூட்டு நாய் தான்னாக் கூட நல்ல சித்திரத்துக்கு உடல் அழுத்தம் குறையாம இருக்கனும். ஒருத்தன் எட்ட நின்னு நம்ம நாய் தரத்த மதி போடுறாம்ன்னா அவன் கணிப்பு, பொட்ட நாய் தான் ஆனா நல்ல நெடுவமா தூக்கலா தெரியுதேனு தான் இருக்கனும். கிட்ட வந்து பாக்கவும்தான் சே… நமக்கே தப்பிருச்சே ஆண் நாய் தான இந்த ஒழுக்கத்துல ஓவியமா இருக்குனு மலைக்கும்” இது என் குருநாதர் எனக்கு அருளியது! இந்த இடத்தில் இருந்துதான் அன்று அவர் சொன்னதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். போக அவர் சொன்ன இடத்திற்கு நான் சென்று சேர்வேனா வேறு ஒரு அளவுகோலை கையில் எடுப்பேனா என்பது வேறு கதை. நிற்க,
இங்கு இது மட்டமா? அது சிறப்பா என்பது அல்ல விசியம். ஒரு பக்கத்தின் தேர்வும் – ரசனையும் எப்படி இன்னொரு பக்கத்தில் மாறுபடுகிறது என்று கவனித்தீர்களா? சொல்ல வந்த கருத்து அதுவே. ஒரு வகையில் இது பிறவியான – பருவெட்டான – பருங்கோப்பு உடல் கட்டு கொண்ட பெரும்பான்மை ரசனையில் இருந்து முற்றாக மாறுபட்டு நிக்கிறது. அதே நேரம் இனவழி, வர்கம், ஒழுக்கம், திறன் என்ற மரபு மதிப்பீட்டில் மாறாமல் நிக்கிறது.
இனவழிகளுக்குள் மாறுபாடுகள் உண்டு எனச் சொல்வதைக் காட்டிலும் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியில் பார்த்தால் கூட ஒரே இன நாய்களுக்குள் மாறுபாடுகளை பார்க்க முடியும் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம் தென்மாவட்டங்களுக்கு உள்ளேயே தான் சொல்கிறேன். ஒவ்வொரு ஐம்பது கிலோமீட்டர் இடைவெளியில் கூட நாம் மாறுபாடுகளை உணர முடியும்.
அதற்கு என்ன காரணம்? மாறுபடும் தன்மைகள் என்னென்ன? என்பதை அறிய இவற்றில் புழங்கும் கலைச் சொற்களை நீங்கள் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். சிலவற்ற இக்கட்டுரையில் நானும் குறிப்பிட்டு இருக்கிறேன். எளிதில் புரியும் வார்த்தைகள் தான். இருந்தும் முதல் பார்வைக்கு கொஞ்சம் தோராய மதிப்பீட்டைத் தரலாம். இக் கட்டுரையே கூட அதற்காக எழுதப்பட்டது தான். ஒரு மாதிரி வலையை விரித்து வையுங்கள். அடுத்து அடுத்து எதாவது அகப்படும்.