News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Kola pasi Series-8 | கோயம்புத்தூர்: கொள்ளு ரசம் முதல் கமலாத்தாள் பாட்டியின் ஒரு ரூபாய் இட்லி வரை

’’இவர்கள் க்ரைண்டர் செய்வதை நிறுத்தினால் உலகத்தில் இட்லி, தோசை இல்லாமல் போகும் அளவிற்கு இந்த ஊர் உணவுத் தொழில்நுட்பத்தில் பலம் பொருந்திய ஊர்’’

FOLLOW US: 
Share:

பண்டைய காலம் தொட்டு கோயம்புத்தூர் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியினரின் வசிப்பிடமாக இருந்துள்ளது என்கிற குறிப்புகளை சங்க காலம் முதலே காண்கிறோம். கோசர்கள் வசித்த இடம் தான் கோசம்புத்தூர் என்று ஒரு கதையும். கோனன் என்கிற வேட்டுவர் தலைவனுக்கு இரண்டு மகள்கள்  கோணி மற்றும் முத்து அதுவே கோணி முத்து ஊர் என்றும், இந்த கோசம்புத்தூர் கோணிமுத்தூர் தான் மருவி கோயம்புத்தூர் என்றானதாக இந்த ஊரின் பெயர் காரணங்களுக்கு வெவ்வேறு கதைகள் கூறப்படுகிறது. 

"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று  அழைக்கப்படும் கோயம்புத்தூர் மேற்கில் கேரளாவின் பாலக்காட்டு கணவாய், வடக்கில் சகல்கட்டி கணவாய்,  நீலகிரி சூழ, சிறுவாணி ஆற்றின் சலசலத்த அரவணைப்பில் இயற்கையின் மடியில் தத்தளிக்கிறது. பொறியியலும், நெசவும் என தமிழகத்தின் பெரும் தொழில் நகரமாக கோயமுத்தூர் திகழ்வதால் இங்கே பல மாநிலங்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள் என மக்கள் சஞ்சாரத்துடனேயே இந்த நகரம் காட்சியளிக்கும். பல்வேறு நிலங்களின் மக்கள் சங்கமிக்கும் இடம் என்பதால் உணவுகள் இந்த நகரத்தில் எப்பொழுதுமே கொண்டாட்டமாகவே இருக்கும். 

நான் கோயமுத்தூர் செல்லத் தொடங்கிய காலத்தில் என் நண்பர்களின் வீடுகளில் தான் தங்குவேன். அதிகாலையில் நீரில் மாட்டுச்சாணம் - மஞ்சள் கலந்து தெளித்த வாசல்களைப் பார்ப்பதே புதிய காட்சியாக இருந்தது. கொங்கு பகுதி வேளாண்மைக்கு பெயர் பெற்ற பகுதி என்பதால் இங்கே பாரம்பரிய உணவிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கொள்ளு ரசம், கொள்ளுச் சட்னி என கொள்ளு வகைகள் கோயமுத்தூர் அளவிற்கு வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. என்னங்கடா குதிரையின் உணவை எல்லாம் நீங்க சாப்பிடுறீங்க என்று தான் நானும் முதலில் கொஞ்சம் யோசித்தேன், ஆனால் கொள்ளு சாப்பிட சாப்பிட ருசியும் உடலுக்கு திடமும் தான். கொள்ளுப் பருப்பை வேகவைத்து அதில் கரும்புசர்க்கரை போட்டு கொடுத்தார்கள், அப்படி ஒரு அபார ருசி, சர்க்கரை பொங்கல் எல்லாம் இப்ப வந்தது எங்க பகுதியில் இதுதான் பண்டிகைகள் நேரம் செய்யப்படுகிற இனிப்பு என்றார் ஒரு பெரியவர். 

கேழ்வரகுக் கூழ், கம்மங் கூழ், கேழ்வரகு கம்பு தோசை, திணை உப்புமா, திணை தோசை, கேழ்வரகு கம்பு லட்டு, பாசிப்பருப்பு தோசை, களி-கீரை கடைசல், அடை, இனிப்பு-கார கொழுக்கட்டை, கேழ்வரகுப் புட்டு என பாரம்பரிய உணவுகளின் இத்தனை வகைகள் வேறு எங்குமில்லை. கோயம்பத்தூர் பகுதியில் செய்யப்படும் தேங்காய் பால் சந்தவையை வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. ஒரு மிகவும் ருசியான ஆரோக்கியமான சத்தான உணவு. அதனை தாளித்து காரம் சேர்த்தும் செய்யலாம். இளம் பச்சை புளியங்காய், புளிய இலைகள் போட்டு வைக்கும் பச்சப் புளி ரசமும் இந்த பகுதியின் சிறப்பு. சோள சாதம் செய்து அதில் மிளகாய் பொடி போட்டு பிசைந்து சாப்பிடுவார்கள். 

இப்படியான அழுத்தமான உணவுக் கலாச்சாரம் உள்ள ஊரில் அனைவரும் வேலை வேலை என அலைந்து கிடப்பதாலேயே தரமான உணவகங்களின் தேவை மிக அவசியமாக இருந்தது. 50 ஆண்டுகளாக இந்த ஊரில் இயங்கும் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல்கள் இந்த ஊரின் அடையாளங்களாகவே திகழ்கின்றன. 1939 முதல் இயங்கும் சிஎஸ் மீல்ஸ் ஹோட்டல், கீதா கபே, ஸ்ரீ ஆனந்தாஸ் என சைவ உணவுகளுக்கு பல தரமான உணவகங்கள் கோயமுத்தூரில் உள்ளன. இவைகளுக்கு நடுவில் படையல் இயற்கை உணவகம் ஒரு வித்தியாசமான அனுபவம். அடுப்பில்லாமல் எண்ணெயில்லாமல் மூன்று வேளையும் ஒரு உணவகம் நடத்த முடியும் என்பதை தனது பலவித உணவுகளுடன் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது இந்த இயற்கை உணவகம்.

அசைவ உணவுகள்  சாப்பிட வேண்டும் என்றால் கோயமுத்தூரில் ஒரே குழப்பம் தான், ஒரு முடிவு எடுக்க முடியாத அளவிற்கு தரமான உணவகங்களும் வகைகளும் இருந்தால் குழப்பம் தானே. ஹரிபவனம், நஞ்சை விருந்து நிலையம், கொக்கரக்கோ, ராயப்பாஸ், ஹோட்டல் நஞ்சை, தம்பியண்ணன், ஸ்ரீ சுப்பு மெஸ், ஷாஹி க்ரில், ஹெச்.எம்.ஆர் பிரியாணி என தொடங்கும் இந்த ஹோட்டல்களில் என்னவெல்லாம் கிடைக்கிறது அது எப்படி இருக்கும் என்று எழுதினால் அது தனியே ஒரு புத்தகமாகவே போட வேண்டும். ஜூனியர் குப்பண்ணா, திண்டுக்கல் வேணு, பார்டர் ரஹ்மத் கடைகள் இந்த ஊரின் புதிய வரவுகள்.

இருப்பினும் வேகமாக ஒரு உலா வர முயல்வோம், வாசிக்கும் போதே  எலும்பு, முள் சிக்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு, சிக்கினால் கம்பெனி பொறுப்பு அல்ல. நஞ்சை விருந்து நிலையத்தில் நாட்டுக்கோழி, வான்கோழி. அசல் கன்னனூர் பாணி சமையல் வகைகளுக்கு மூகாம்பிகா மெஸ், அங்கே  வஞ்சரம் மீன்,  இறால் பிரமாதம். ஆபிதா ஹோட்டலில் திவ்யமான  பீஃப் பிரியாணி, அப்படியே வளர்மதி கொங்குநாட்டு சமையல் உணவகத்திற்கு கொஞ்சம் தயாரிப்புடன் காலை உணவு சாப்பிடாமல்  வயிற்றை காய வைத்து தான் செல்ல வேண்டும். 

கண்ணணன் ரெஸ்டாரண்டில் மூளைத் தொக்கு, மட்டன் சாப்ஸ், குடல், தலக்கறி. அன்னவாசல் உணவகத்திற்கு சென்றால் மீன், கனவாய், ரத்த பொறியல் உள்ளிட்ட 15 வகை அசைவ உணவுகள் தயாராக காத்திருக்கும். கேரளா அடுமனைகள், டீ-ஜூஸ் கடைகள், சிப்ஸ் கடைகள் நிரம்பி வழியும் கோவையில், அசல் சுவையுடன் கூடிய கேரள உணவுகளுக்கும் பஞ்சமில்லை. மலபார் ரெஸ்டாரண்டில் மீன் பொளிச்சது, பொத்திச்சோறு, கேரளா தேங்காய்  சிக்கன் குழம்பு, கொடும்புளி போட்ட மலபார் மீன் கறிகள் உள்ளிட்ட கேரள உணவுகள் கிடைக்கும்.  இங்கு கிடைக்கும் பொத்திச்சோறு சென்னையில்  பொட்டிச்சோறு என்று கிடைக்கிறது, பார்சலாக மட்டுமே இது கிடைக்கும் வாங்கி ஒரு கட்டு கட்டியிருக்கிறேன்.  அசைவ உணவுகள் கோழி உருண்டை குழம்பு இந்த ஊரின் சிக்னேச்சர் டிஷ். அதே போல் டி.எம்.எஃப் ரெஸ்டாரண்டில் சிக்கன் டிக்கா இட்லி, முட்டை இட்லி, முட்டை சேவை, சிந்தாமணி தோசை என்கிற இந்த உணவு வகைகளையும் நான் வேறு எங்கும் ருசித்ததில்லை, கேள்விப்பட்டதும் இல்லை. Bird on Tree என்கிற உணவகமும், கவ்லூன் (Kowloon) உணவகமும் உணவு வகைகளை ருசிக்கத் துணிந்தவர்களுக்கான கடைகள். அசல் சீன உணவின் பிரியர்கள் கவ்லூனுக்கு சென்று ருசிக்கலாம். 

உணவு இயந்திரங்கள் கண்டுபிடிப்பதிலும் அதனைத் தயாரித்து உலகம் முழுவதும் அனுப்புவதிலும், கோவை உணவு வரைபடத்தில் தனித்த அடையாளத்துடன் திகழும் நகரம். இவர்கள் க்ரைண்டர் செய்வதை நிறுத்தினால் உலகத்தில் இட்லி, தோசை இல்லாமல் போகும் அளவிற்கு இந்த ஊர் உணவுத் தொழில்நுட்பத்தில் பலம் பொருந்திய ஊர். தேங்காய் துருவும் கருவி, பெரிய அளவில் அரிசி பருப்பு வேகவைக்கும் களன்கள், அடுமணைகள், மாவு பிசையும் இயந்திரம் என ஒரு நூறு இயந்திரங்கள் கோவையில் தயாரிக்கப்படுகின்றன. அதே போல் பல அட்ராசிட்டியிலும் இந்த ஊர் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள் உளுந்த வடை போட மிஷின் கண்டுபிடிச்சது இவர்கள் தான். கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் கன்வேயர் பெல்ட்டில் உணவுகள் வலம் வரும் என்று வாசித்திருக்கிறேன். அதே போல் மற்றொரு உணவகத்தில் உணவு ஆர்டர் கொடுத்தால் ரோபோக்கள் உணவு பரிமாறும் என்பதையும் கேட்டு கொஞ்சம் மெர்சல் ஆயிட்டேன். 

கோவை என்றாலே எனக்கு இங்கு கிடைக்கும் காளான் வறுவல், இளநீர் பாயாசம், ஏ-1 சிப்ஸ், பனானா ஸ்லைஸ்  (Banana Slice) கடையின் சிப்ஸ் வகைகள் தொடங்கி அது ஸ்ரீ அன்னப்பூர்ணாவின் மசால் கடலை, காபியுடன் தான் கோவை பயணங்கள் நிறைவுறும். எத்தனை சிகரங்களை இந்த ஊர் தொட்டாலும் இந்த ஊரில் ரூ.25-க்கு முழுச் சாப்பாடும், ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகளையும் ஒரு உணவகம் படைத்தபடி இருக்கிறது. இங்கே படையல்கள் கடவுள்களுக்கு அல்ல உழைக்கும் மக்களுக்கு. இந்த உணவகத்தின் அருகில் குடியிருக்க வேண்டும் என்று பலர் சிங்காநல்லூர் பகுதிக்கு குடிவருகிறார்கள் என்றால் இந்த உணகத்தின் முக்கியத்துவத்தை யூகித்துக்கொள்ளுங்கள். சாந்தி சோஷியல் சர்வீசஸ் நிறுவனம் நடத்தும் இந்த உணவகம் தமிழகத்தின் சமூகப் பொறுப்புள்ள ஒரு வழிகாட்டி நிறுவனம்.

சாந்தி சோஷியல் சர்வீசஸ் நிறுவனம் ஒரு பெரும் நிறுவனம் என்ற போதும், அவர்களின் சேவைக்கு சற்றும் குறையாது என் மனதில் தோன்றும் கமலாத்தாள் என்ற பெயர். கமலாத்தாள் காலை ஐந்து மணிக்கு எழுந்து தனது வீட்டில் இருந்தபடி இட்லி விற்பனை செய்கிறார். இந்த இட்லியின் விலைக்கு மட்டும் அல்ல மாறாக ருசிக்கே  ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இட்லியின் விலை ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாய் இட்லிப் பாட்டி கொரோனா காலத்தில் உலகப் புகழ் பெற்றார். எட்டணாவுக்கு தான் இட்லி வித்தேன் விலை வாசி கூடிவிட்டது அதனால் தான் ஒத்த ரூபாயா மாத்திட்டேன் என்கிற கமலாத்தாளின் வார்த்தைகளில் உள்ள அறத்தை இன்றைய உலகில் காண்பது அரிது. 

Published at : 24 Dec 2021 11:01 AM (IST) Tags: Coimbatore writer muthukrishnan Kolapasi Kola Pasi kowloon restaurant best foods hotels in kovai kamalathal idli coimbatore annapoorna Mookambika Mess

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?

IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?

IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?

IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?

Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?

Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?