Fermentation : பழைய சோறு சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் இருக்கா? சத்துணவு நிபுணர் சொல்வது என்ன?
பழையசோறு.. ஏதோ வழியற்றவர்களின் உணவாக பார்க்கப்பட்ட காலம் போய் இன்று டாப் க்ளாஸ் ஹோட்டல் மெனுவில் fermented rice என்ற பெயரில் அழகாக அமர்ந்து கொண்டிருக்கிறது.
பழையசோறு.. ஏதோ வழியற்றவர்களின் உணவாக பார்க்கப்பட்ட காலம் போய் இன்று டாப் க்ளாஸ் ஹோட்டல் மெனுவில் fermented rice என்ற பெயரில் அழகாக அமர்ந்து கொண்டிருக்கிறது.
திடீரென பழையசோறு மீது மக்கள் ஆர்வம் திரும்பக் காரணம் வழக்கம்போல் மேற்கத்திய உலகின் அங்கீகாரம் தான்.
காலம் காலமாக நம் முன்னோர்கள் நெய்யை உணவில் சேர்த்துவந்தனர். ஆனால் நம் நாட்டில் திடீரென ஒரு தத்துவம் முளைத்தது நெய் கேடு, கொழுப்பை சேர்க்கும் என்றெல்லாம் பரவியது. அப்புறம் அமெரிக்காவில் ஆராய்ச்சிகள் செய்து நெய்யை எப்படி எடுத்துக் கொண்டால் நன்மை தரும் என்றெல்லாம் விளக்கிய பின்னர், அங்கே க்ளாரிஃபைட் பட்டர் என்று அதற்கு பெயர் வைத்து பிரபலமான பின்னர் இப்போது அது இங்கே அங்கீகாரம் பெறத் தொடங்கிவிட்டது.
இப்படித்தான் பழையசோற்றின் கதையும் ஆகியுள்ளது. 2017-ம் ஆண்டில் அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பலன்களைப் பட்டியலிட்டிருந்தது. அதன் பின்னர் இப்போது பழையசோற்றின் மவுசு எகிறியுள்ளது.
சாதாரண சோறைவிட ஏன் சிறந்தது..
பழைய சோற்றின் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. அதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச் சத்து, மக்நீஸியம், பொட்டாசியம், செலீனியம் ஆகியன நிறைவாக இருக்கின்றன. இரவு முழுவதும் ஊற வைப்பதால் அதில் ப்ரோபயாடிக் சத்து சேர்கிறது. இது குடலுக்கு இதமானது.
இந்திய கிராமங்களில் அதுவும் குறிப்பாக தென்னிந்திய கிராமங்களில் பழையசோற்றை மண் சட்டிகளில் ஊற வைத்து உருவாக்குகின்றனர். முதல் நாள் மதியம் ஊறவைக்கும் சோற்றை மறுநாள் மதியம் உண்கின்றனர்.
பழையசோற்றில் இருப்பதுபோல் ப்ரோபயாடிக் எதிலும் இருப்பதில்லை. அதில் லேகோடோபாசிலஸ், லேக்டிக் அமிலம் அதிகமாக இருக்கின்றன. பழையசோறு உண்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
பழைய சோறு தான் வயிற்று உபாதைகளுக்கு இப்போது புதிய மருந்தாகியுள்ளது. பழையசோறு தான் இப்போது உலகிலேயே சத்தான உணவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
IBD (Irritable bowel disease) என்ற குடல் தொடர்பான நோய்களுக்குப் பழைய சோறு மருந்தாகச் செயல்படுவது குறித்து புதிய ஆராய்ச்சியை இப்போது தொடங்கியிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. இந்த ஆராய்ச்சிக்காக ரூ.2.7 கோடி நிதியும் மூன்றாண்டுக் கால அவகாசமும் தரப்பட்டுள்ளது. IBD நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் 600 நோயாளிகளை இந்த ஆய்விற்குப் பயன்படுத்தவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
நம்மூரில் விளையும் மஞ்சளில் இருந்து, நம் பழையசோறு வரை அத்தனையும் மருத்துவ குணம் நிறைந்தவை. உணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு மட்டுமல்ல வாழ்வியலாகவும் இருந்தது. நாமும் அதைப் பின்பற்றினால் இன்று மக்களை ஆட்கொள்ளும் வாழ்வியல் நோய்கள் பலவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )