காரசாரமான ஸ்ட்ரீட் ஸ்டைல் சமோசா!: செய்முறை எப்படி?
பேக்கரியில் கிடைக்கும் சமோசாக்களை விட ரயில்களிலும் சாலைகளில் இருக்கும் குட்டிக் கடைகளிலும் கிடைக்கும் மினி ரக சமோசாக்களுக்கு மவுசு அதிகம்.
பேக்கரியில் கிடைக்கும் சமோசாக்களை விட ரயில்களிலும் சாலைகளில் இருக்கும் குட்டிக் கடைகளிலும் கிடைக்கும் மினி ரக சமோசாக்களுக்கு மவுசு அதிகம். இதன் சுவையும் தனி என்பதால் மாலையில் வேலை முடித்து ரயிலில் பயணிப்பவர்கள் சமோசாவை எதிர்பார்த்தே ரயிலில் பயணிப்பது உண்டு. ஆனால் இதனை வீட்டிலேயே மிக எளிதாகச் செய்யலாம்.
வீட்டிலேயே மொறுமொறுப்பான சமோசா செய்வது எப்படி:
1. சமோசாவுக்கான மாவை தயார் செய்வதுடன் இதனைத் தொடங்கலாம். அதற்கு முதலில் மைதா, சிறிதளவு உப்பு, நசுக்கிய ஓமம் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும். சிலர் சமோசா மாவுக்கு நெய் சேர்ப்பதுண்டு. ஆனால் அது சமோசாவுக்கான மொறுமொறுப்பைக் குறைத்து மிருதுவான தன்மையை கொடுக்கும். நமது தேர்வின்படி நெய் அல்லது எண்ணெய் உபயோகிக்கலாம். பிறகு மாவை பிசைவதற்கு படிப்படியாக தண்ணீர் சேர்க்கவும்.
மாவை மென்மையாக இருக்காமல், இறுக்கமான பதத்தில் வைத்திருக்கவும். மாவு மென்மையாக இருந்தால், சமோசா வெந்தவுடன் மென்மையாக மாறும். அதே சமயம் மாவு மிகவும் கடினமானதாக இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
2.மாவை நன்கு பிசைந்த பிறகு சுமார் 15 நிமிடங்கள் அதனை ஊறவைக்கவும்..சிறிது நேரம் அப்படியே வைத்த பிறகு சிறிது நெய்யை மாவில் தடவவும். இப்படி நெய் தடவுவது மாவின் வெளிப்புற அடுக்கு மிருதுவாக இருப்பதை உறுதிபடுத்தும்.
3. சமோசாவிற்கு ஸ்டஃபிங் செய்வதற்கு சீரகம், பெருங்காயம், நசுக்கிய முழு கொத்தமல்லி விரை, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பட்டாணி ஆகியவற்றை ஒரு வானலியில் வதக்கவும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனை இந்தக் கலவையுடன் சேர்க்கவும். நினைவிருக்கட்டும் உருளைக்கிழங்கை மசிக்க மட்டுமே செய்யவேண்டும் துண்டுகளாக வெட்டக் கூடாது.
4. இந்தக் கலவையில் கொத்துமல்லித் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். மேலும் உப்பு, சாட் மசாலா, கசூரி மேத்தி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றையும் சேர்க்கலாம். மசாலாவை சேர்ப்பதற்கு முன்பு காய்ந்த வானலியில் அதனை சிறிது வறுத்து பிறகு சேர்ப்பது நல்லது.
5. இப்போது மாவை சிறிய பகுதிகளாகப் பிரித்து சிறிய மெல்லிய ரொட்டிகளாக உருட்டவும். ஒவ்வொரு ரொட்டியையும் பாதியாக வெட்டவும். வெட்டிய நுனியில் சிறிது தண்ணீரைத் தடவவும், இது சமோசா பிளவுபடாமல் வைக்கும். இதில் ஸ்டஃபிங்கை வைத்து சமோசா வடிவில் மடிக்கவும். ஸ்டப்பிங் கூடுதலாகவும் குறைவாகவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
6. இதனை மிதமான தீயில் வறுக்கவும். பொன்னிறமாக மாறும் வரை வறுப்பது உள்ளிருக்கும் ஸ்டபிங்கையும் கெடாமல் பார்த்துக்கொள்ள வழிவகை செய்யும்.
சூடான சமோசா தயார்!